Breaking News

Content

திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் கருத்தரங்கம்!

Posted On :Friday December 06, 2013

பாபர் மசூதியினை இடித்த தினமான டிசம்பர்-06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம்,பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளும், பாபர் மசூதி குறித்த வரலாற்று குறும்படங்களும் மக்களுக்கு திரையிடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி பாலக்கரையில் உள்ள மீனாட்சி மஹாலில் பாபர் மசூதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் டிசம்பர்-06 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் I.சபியுல்லா அவர்கள் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் A.முகமது சித்தீக் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் அவர்கள் தங்களது உரையில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதில் உள்ள அரசியல் சதிகளையும், அதன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உள்ள முரண்பட்ட நீதிமன்ற நிகழ்வுகளையும் விளக்கி பேசி எதிர்காலத்தில் இஸ்லாமிய சமூகம் இனி இப்படி ஒரு அவல நிலைக்கு ஆளாக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு பெற்ற சமூகமாக தங்களை மாற்றி இந்த இந்திய தேசத்தில் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அது மட்டுமின்றி பாபர் மசூதி விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் செய்த தவறுகளும் அதற்கு துணை போன அனைத்து அரசு இயந்திரங்களுமே முக்கிய குற்றவாளிகளே இவர்கள் நினைத்து இருந்தால் பாபர் மசூதியினை இடிக்க விடாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று விளக்கினார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்வினை போல் பாசிஸ சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர் ஆனால் பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மசூதி இடிப்பு ஒரு திட்டமிட்ட சதி என அம்பலப்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி பாபர் மசூதியினை இடித்த முதன்மை குற்றவாளிகளின் பெயர்களையும் லிபரான் கமிஷன் குறிப்பிட்டுள்ள பிறகும் குற்றவாளிகள் கைது செய்து தண்டிக்கப்படாமல் உள்ளது நமது நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் மிகப்பெரிய அவமானமாக உள்ளது என மாநில தலைவர் தனது சிறப்புரையில் கூறினார்கள். அதன் பிறகு ஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சிலின் திருச்சி மாவட்ட தலைவர் S. இனாஆமுல் ஹஸன் காஷிஃபி மற்றும் ஜமாத்துல் உலமாவின் மாவட்ட துணைத்தலைவர் K.M. ஆலிமுத்தீன் ஹஜ்ரத் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். SDPI கட்சியின் மாவட்ட தலைவர் K. முபாரக் அலி மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் B. சுபுகத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு முன்னிலை வகித்தனர். கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக பாபர் மசூதியின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம் மக்களுக்கு திரையிடப்பட்டது. இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் M. முகமது இப்ராஹிம் நன்றியுரைக்கூற பாபர் மசூதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நிறைவு பெற்றது. இக்கருத்தரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டனர்.