Breaking News

Content

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணியில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted On :Friday February 21, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் அணிவகுப்புடன் கூடிய ஒற்றுமை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் போன்றவை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.அண்டை மாநிலமான கர்நாடகாவில் 3 இடங்களிலும், கேரளாவில் 16 இடங்களிலும் அமைதியான முறையில் அணிவகுப்புடன் கூடிய பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டது. காவல் துறையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு பிப்ரவரி 17 மதியம் 4 மணிக்கு பேரணி தொடங்குவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கெடுக்க ஆர்வமாக வந்து சேர்ந்தனர். மதியம் 3.30 மணியளவில் தடியடி நடத்துவதற்கு தயார் நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான அதிரடிப்படையினர் யாருக்கும் தெரியாமல் திடீரென வரவழைக்கப்பட்டனர். மாவட்ட எஸ்.பி.மயில் வாகனன் உத்தரவின் பேரில் பேரணி நடக்கும் இடத்திற்கு வந்த டி.எஸ்.பி.அண்ணாமலை ஆழ்வார் மற்றும் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை தலைமையில் வந்த காவல் துறையினர் திடீரென அனுமதியில்லை எனக்கூறி கலைந்து செல்ல கூறினர். அப்போது பேரணியில் இருந்து எங்களுடன் தொடர்பில்லாத சிவக்குமார் மற்றும் சுதர்சன் என்ற இரண்டு பேர் கல்வீசினர். அவர்களை பிடித்து போலீஸில் கொடுத்தபின்பும் போலீசார் தடியடி நடத்தினர். இதில்பலர்படுகாயமடைந்தனர். பத்திரிக்கையாளர் ஒருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். போலீசாரின் இந்த சிறுபான்மையினர் விரோத போக்கை கண்டித்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 21.2.2014 அன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அபுதாஹீர் கண்டன உரையாற்றினார். நாகர்கோவில் நகர தலைவர் இப்ராஹீம், தக்கலை நகர தலைவர் நூறுத்தீன் பைசல், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, மாவட்ட பொருளாளர் ஜாஹிர் ஹுசைன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பிர்தவுஸ், நூஹ், நகர தலைவர்கள் இஸ்ஹாக், அன்சார்,அஸ்ரப், சாதிக், இஸ்லாமிய கலாச்சார பள்ளி தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, கிறிஸ்த்தவ முன்னேற்ற ஐக்கியம் மாநில பொதுச்செயலாளர் தியோடர் சாம், சிபிஐ(எம்.எல்) மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, எஸ்டிடியு மாவட்டதலைவர் ஷாகுல் ஹமீது ஷுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.