Breaking News

சென்னையில் நடைபெற்ற பள்ளி செல்வோம் 2018 – ‘கல்வியால் செழுமையடைவோம்’ தேசிய பிரச்சாரத்தின் மாநில துவக்க நிகழ்ச்சி!

உலக அரங்கில் நமது தேசம் மனித வளத்தில் வளர்ந்து வரும் வேளையில் சமீபத்திய ஆய்வு முடிவுகள்  நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காண சவாலாகவும், நாம் அதிக கவனமெடுக்க வேண்டிய பிரச்சனையாகவும் ஒன்றை சுட்டிகாட்டுகின்றது, அது 2016 (Annual Status Education Report) வெளியிட்ட  சர்வே அறிக்கையில் நமது தேசத்தில் 3% குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு இதுவரை  சென்றதில்லை எனவும், 15 வயதை அடைந்த  குழந்தைகளில் 13.5% பேர் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார்கள் என்றும் கூறுகின்றது. மேலும் சர்வ தேச அளவில் முழுமையாக அடிப்படை கல்வி  கிடைக்க பெறாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது, நமது நாட்டில் இன்னமும்   பல கிராமங்களில்  எழுத, படிக்க தெரியாதவர்கள் உள்ளனர் என்பது துரதிருஷ்டவசமானது. இதில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் பெரும்பாலோர் பெற்றோர்களின் வறுமையின்  காரணத்தால் குழந்தை தொழிலாளர்களாகவோ, கொத்தடிமைகளாவோ மாற்றப்படுகிறார்கள் என்பதையும் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் மனித வளம் என்பது கல்வியறிவுடன் வளர்ச்சியடையும் போதே  அது முழுமையாக பயன்படும் எனும் போது. அரசு இந்த துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்ட போதும், போதிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை  இந்நிலையில் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி (RTE-2009) எனும் சட்டத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்திட அரசுடன் இணைந்து மக்களும், அரசு சாரா நிறுவனங்களும், சமூக இயக்கங்களும் பணியாற்றிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது. நமது பிரச்சாரம்  அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மாற்றத்திற்கான  களப்பணி செய்திடவும் ஒருகிணைந்து பணியாற்ற பாப்புலர் ஃப்ரண்ட் அழைக்கிறது. 

தேசத்தின் எதிர்காலமும், வளர்ச்சியும் மக்களின் கல்வியை சார்ந்தே உள்ளது என்பதில் நம்பிக்கையுடன் செயல்படும்  பாப்புலர் ஃப்ரண்ட்,  2012 ஆம் ஆண்டு முதல் ‘பள்ளி செல்வோம் (School Chalo)’ எனும் முழக்கத்துடன் தேசிய பிரச்சாரத்தை முன்னெடுக்க துவங்கியது. இப்பிரச்சாரம் 6 ஆண்டுகளை கடந்த நிலையில் தேசத்தின் பல கிராமங்களில் மாணவ / மாணவிகளிடத்தில் நல்லதொரு முன்னேற்றத்தை நாம் ஏற்படுத்தி வருகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சாரத்தின் வாயிலாக  பல்லாயிரக்கணக்கான மக்களை நமது இயக்க தொண்டர்கள் சந்திக்கின்றார்கள்.  கடந்த 2016-17 கல்வி ஆண்டில் மட்டும்  தேசம் முழுவதும் மொத்தம்  16 மாநிலங்களில், 128 மாவட்டங்களில்,  223 பஞ்சாயத்துகளில் வாழும்  மக்களுக்கு அடிப்படை கல்வியின் முக்கியத்துவத்தை  பாப்புலர் ஃ ப்ரண்ட் சார்பாக வழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோடு, இடைநின்ற ஆயிரக்கணக்கான மாணவ / மாணவிகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்துள்ளோம். இப்பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக கிராமபுறங்களில் வாழுகின்ற மக்களிடையே பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பது, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது,  பள்ளி செல்லா குழந்தைகளுக்கு  கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களை அருகில் உள்ள பள்ளி கூடத்தில் சேர்த்தல் என பல கட்டமான பிரச்சாரத்தை  நமது அமைப்பின் சார்பில் மேற் கொள்கின்றோம்.  இப்பணியில் பங்களிக்க  ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டர்களை ஊக்குவித்து களப்பணியாற்ற பயிற்சியளித்து வருகிறோம். இதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும்  6  கிராமங்களை (‘சர்வ சிக்ஷா கிராம் – SSG’) முழுமையான கல்வி கிராமமாக மாற்ற  பாப்புலர் ஃப்ரண்ட்  கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமங்களில் பணியாற்றி வருகின்றது. 2012-2017 ஆம் ஆண்டுகள்  வரை நடைபெற்ற பிரச்சாரத்தின் வாயிலாக 3,58,949 மாணவ / மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர், இதுவரை இதற்காக 12,05,04,116 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 

வருடம் மொத்த மாணவ / மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்  வழங்கப்பட்டது செலவிடப்பட்ட தொகை
2012 64,032 1,92,09,600
2013 1,13,283 3,39,84,900
2014 76,645 2,51,30,116
2015 44,360 1,54,64,390
2016 33,267 1,38,45,562
2017 27,362 1,28,59,548

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நமது அமைப்பு சார்பாக ‘பள்ளி செல்வோம் (School Chalo)’ பிரச்சாரத்தில் கல்வியில் பின்தங்கிய 37 கிராமங்களை கணக்கெடுக்கப்பட்டது, மேலும் கட்டாய இலவச கல்வி சட்டத்தை (RTE-2009) பற்றி 102 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவ / மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேசிய அளவில்  2017-18 நடப்பு கல்வி ஆண்டில் 17 மாநிலங்களில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.  தமிழகத்தில் ஏப்ரல் 13ல் துவங்கி ஜுன் 30 வரை அனைத்து மாவட்டங்களிலும் கிராமம், கிராமமாக சென்று அடிப்படை கல்வியின் முக்கியத்துவம் குறித்து   மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். 

இதன் ஒரு பகுதியாக பள்ளி செல்வோம் 2018 – ‘கல்வியால் செழுமையடைவோம்’ தேசிய பிரச்சாரத்தின் மாநில துவக்க நிகழ்ச்சி இன்று (13.04.2018) சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர்கள் அ.முஹம்மது பயாஸ், எம்.நாகூர் மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.முஹம்மது இப்ராஹிம் மற்றும் தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி செல்வோம் – 2018 போஸ்டரை வெளியிட்டனர். 

மேலும் இன்று (ஏப்ரல் 13ம் தேதி) மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பள்ளி செல்வோம் பிரச்சார விழிப்புணர்வு  தட்டிகள் மற்றும் பிளக்ஸ்களை ஏந்தி பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவ / மாணவிகளை கணக்கெடுத்து மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தல், விழிப்புணர்வு பேரணி மற்றும் தேவையுடைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல்,  சமூக வலைதளம் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.


WED_0659 WED_0655

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *