Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் NIA மேற்கொண்டுவரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்கொண்டு வெற்றிபெறும் – மாநில தலைவர் அறிக்கை.

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எதிர்கட்சிகளின் குரல்வளைகள் நசுக்கப்படுவதும், எதிர் கருத்துள்ளவர்கள் முடக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட CBI, NIA, அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகள் இன்று RSS மற்றும் பா.ஜ.க வின் அரசியல் நோக்கங்களை நிறைவு செய்யும் கருவிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றது. எதிர்கட்சிகளை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு மிரட்டுவதும், இஸ்லாமிய அமைப்புகளை தேசிய புலனாய்வு முகமையை கொண்டு முடக்க நினைப்பதும் நித்தம் நித்தம் நடைபெற்று வருகின்றது. 2006 முதல் சங்பரிவார தீவிரவாத இயக்கங்களால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையினால் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர், அதே வேளையில் முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைப்புகளையும் குறிவைத்து NIA-வின் செயல்பாடுகள் இருப்பதும் தொடர்கின்றது.

தேசம் முழுவதும் பசு குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், RSS சங்பரிவாரங்களால் நிகழ்த்தப்பட்ட கலவரங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள், மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட வழக்குகள் என பல்வேறு வழக்குகளை பாப்புலர் ஃப்ரண்ட் முன்னின்று நடத்தி வருகின்றது. முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக பல்வேறு பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் தேசம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் மக்கள் மத்தியில் தொடர்ந்து தோலுரித்து வருகின்றது. இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார அமைப்புகள் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறு பிரச்சாரங்களை தேசம் முழுவதும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அநியாயமான முறையில் தடை செய்வதற்கான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.    

கேரளாவில் ஹாதியா வழக்கிலும் இன்னும் உள்ளூர் அளவில் நடந்த சில வழக்குகளிலும் லவ் ஜிஹாத், ISIS தொடர்பு போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் மீது NIA நடத்திய அத்துணை வழக்குகளும் பொய்யானவை என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற சசிகுமார் கொலைவழக்கை கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் மீது களங்கம் ஏற்படுத்த NIA திட்டமிட்டு வருகின்றது. இவ்வழக்கு தமிழக CBCID-யால் விசாரணை செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருந்த நிலையில் NIA விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதற்காகவே UAPA சட்டமும் இவ்வழக்கில் திணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு முக்கிய கொலை வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமல் உள்ள நிலையில் கோவை சசிகுமார் வழக்கை மட்டும் NIA விசாரணை செய்வது திட்டமிட்டு முஸ்லிம்களை குறிவைத்து NIA காய் நகர்த்துகின்றது என்பது தெளிவாகிறது. அதே வேளையில் சசிகுமார் கொலைக்கு முன்பாக ஹக்கீம் என்ற முஸ்லிம் இளைஞர் கொலை செய்யப்பட்டதும், சசிகுமார் கொலைக்கு பின்பு அப்துர் ரஜாக் என்பவர் கொலை செய்யப்பட்டதும் இதுவரை எந்த புலனாய்வு அமைப்புகளாலும் விசாரணை செய்யப்படாமல் உள்ளது. மேலும் சசிகுமார் கொலை வழக்கை தொடர்ந்து கோவையில் நடைபெற்ற கலவரங்களில் இந்துத்துவ அமைப்புகள் மீது போடப்பட்ட பள்ளிவாசல் மீது வெடிகுண்டு வீசியது, காவல்துறை வாகனம் எரிப்பு உட்பட 237 வழக்குகள் எவ்வித விசாரணையும் இன்றி கிடப்பில் உள்ள நிலையில் சசிகுமார் கொலை வழக்கை மட்டும் ஒன்றறை ஆண்டுகளுக்கு பின்பு NIA எடுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இதற்கு முன்பு கேரளாவில் ஹாதியா வழக்கை மையப்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை முறியடித்ததை போல் தமிழகத்திலும் தற்பொழுது NIA-வின் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறு முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்கொண்டு வெற்றிபெறும் என்பதை தெரிவித்துகொள்கின்றேன்.                     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *