Breaking News

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது: தமிழகத்தின் உரிமையை மீட்கும் களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து போராடும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பிப்ரவரி 16, 2018 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற 2007-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் உத்தரவிட்டது. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பில் இது 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவே தமிழர்களுக்கான ஆறுதலாக உள்ளது.

தமிழர்களின் உயிர் வாழும் பிரச்சனையாக மாறியுள்ள காவிரி பிரச்சனை இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தங்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கள் உணர்த்தி வருகின்றன. தமிழக மக்களின் நலனை விட கர்நாடகாவில் தங்கள் தேர்தல் நலனே முக்கியம் என்பதையும் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. நிரூபித்து வருகின்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் விதித்துள்ள ஆறு வார கெடு முடிந்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல விவகாரங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசின் போக்கு, தமிழகம் இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கம்தானா என்ற கேள்வியையும் தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் விரோத பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை தவிர அனைவரும் இப்போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசாங்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இவ்விவகாரத்தில் அடையாள போராட்டங்களை மட்டும் நடத்தி எதிர் கட்சிகளின் போராட்டங்களை குறை சொல்லி கொண்டிராமல் மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கம் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மக்களோடு நின்று தொடர்ந்து போராடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து போராட்டங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

Design

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *