Breaking News

மத்திய அரசு அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் படுகொலை செய்கிறது. – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு!

மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்யும் முயற்சி என்ற செய்தி அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் படுகொலை செய்வதாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றம் சாட்டுகிறது.

மத்திய பா.ஜ.க அரசினால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. மலை பகுதிகள், காடுகள், விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள், வனவிலங்குகள் மற்றும் மனித உயிர்கள் உட்பட அனைத்திற்கும் பல்வேறு கேடுகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தான் நியூட்ரினோ, மீத்தேன், கூடங்குளம். இத்தகைய அனைத்து திட்டங்களும் பிற மாநில அரசுகளாலும், மக்களாலும் விரட்டப்பட்டவை. ஆனால் இதை தமிழகத்தில் நிறுவி இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கின்றது மத்திய அரசு. ஏற்கனவே இத் திட்டங்களுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்கள், ஜனநாயக மக்கள் போராட்டங்கள் மற்றும் பரப்புரைகளை பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றது. AIIMS மருத்துவமனை, காவேரி மேலாண்மை வாரியம் போன்ற தமிழகத்தின் நலன் பயக்கும் எந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்தாமல் அழிவு திட்டங்களை மட்டும் நடைமுறைப்படுத்துவது முற்றிலும் தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கையே.

எனவே இதுபோன்ற மக்கள் விரோத செயல்பாட்டை அரசு மேற்கொள்ளும் போது அரசின் செயல்பாட்டை விமர்சிப்பதும் ஜனநாயக ரீதியாக போராடுவதும் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை. அதனடிப்படையில் மே17, நாம் தமிழர் கட்சி, பூவுலகின் நண்பர்கள், ம.க.இக, மக்கள் அதிகாரம் உட்பட மதச்சார்பற்ற அமைப்புகள் போராடியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றது. அரசை விமர்சிப்பதை தேச துரோகமாக கருதி பொய்யான கதைகளை புனைந்து ஜனநாயக அமைப்புகளை தேசத்துரோக அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்யும் இந்த முயற்சியானது மோடி அரசின் எதேச்சதிகார சர்வாதிகார போக்கினை அப்பட்டமாக காட்டுகின்றது. இத்தகைய அச்சுறுத்தலை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

மத்திய அரசின் இது போன்ற சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மதச்சாற்பற்ற சக்திகளும், தமிழர்களும் ஒண்றினைந்து எதிர் கொள்ள வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அவர்களின் சட்டரீதியான ஜனநாயக போராட்டத்தில் என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *