Breaking News

வி.எச்.பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க சென்ற தலைவர்கள் கைது : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கடும் கண்டனம்!

ரத யாத்திரை என்ற பெயரில் வட இந்திய நகரங்களில் இரத்த ஆறு ஓடச் செய்து தங்களது  அரசியல் வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்ட பாசிச சங்க பரிவார சக்திகள் இன்று மீண்டும் அதே பழைய பல்லவியை பாடிக்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலை உடைப்பு, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள்  என அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மத வன்முறையை உருவாக்கும் நோக்கில்  நடத்தப்பட்டு வரும் நிகழ்வுகள் மற்றும் இவர்களது கடந்த கால வரலாறுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இந்த ரத யாத்திரைக்கு தமிழகத்தில்  அனுமதி அளிக்கக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு வலுவான முறையில் கோரிக்கைகள் வைத்திருந்த நிலையில் மேற்படி ரதயாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் ஜனநாயக அடிப்படையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முற்றுகை போராட்டத்திற்கு சென்ற தலைவர்கள் அனைவரையும் வழியிலேயே இடை மறித்து கைது செய்துள்ளதன் மூலம் தமிழக அரசும் காவல்துறையும் அப்பட்டமான ஜனநாயக படுகொலையை செய்திருக்கின்றது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த பிரிவு 144 என்பது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இதுவரை கேட்டிராத வினோதமான ஒருசார்பு  நிலையாக இருக்கின்றது. 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் A.ஹாலித் முகமது செங்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தக் கைதுகளைக் கண்டித்தும் ரத யாத்திரைக்கு அனுமதியளித்த தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அனைத்து  அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக நடைபெறும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் முழு ஆதரவை தெரிவிப்பதுடன், அப்போராட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்.
    
இது விஷயத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமெனவும்  அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலனை செய்து ரத யாத்திரை விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகஅரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன். 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *