Breaking News

ஜார்கண்டில் தடையை எதிர்த்து வலுவடைந்துள்ள பொதுமக்களின் கருத்துக்களை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!

பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான ஜனநாயக விரோத தடையை எதிர்த்து வலுவடைந்து வரும் மக்கள் கருத்துக்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடையை எதிர்த்து வெளிப்படையாக பேசிய அனைத்து அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும் இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்கள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களில் பெரும்பகுதியினர் அதிகரித்துவரும் சங்கபரிவார சக்திகளின் சகிப்பின்மை மற்றும் ஒடுக்குமுறைகள் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தங்களது ஆதரவை அதிகரிக்கவும் தயாராக இருப்பது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மத்திய அரசும், ஜார்கண்ட் மாநில அரசாங்கமும் இந்த எதிர்ப்புகளை தங்களது அரசியலமைப்பிற்கு விரோதமான வழிமுறைகளுக்கு எதிரான தீவிர நினைவூட்டலாக எடுத்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்டிற்கு தடை விதித்த ஜனநாயக விரோத முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தியது.

மெளலானா ஸஜ்ஜாத் நுஃமானிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்ததற்கு எதிர்ப்பு!

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளரும், இஸ்லாமிய அறிஞருமான மெளலானா ஸஜ்ஜாத் நுஃமானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆர்) நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது. அந்த புகாரில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை. மெளலானா ஸஜ்ஜாத் நுஃமானி அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஆதரவாகவும், அதனை சிதைக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகவும் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் தலைவராவார். இது சங்கபரிவாருக்கு எதிராக பேசும் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை நிசப்தமாக்கி, சமூகத்தில் தங்களுக்கு கீழ்ப்படியும் நபர்களை எடுபிடிகளாக பயன்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த கூட்டம் மெளலானா நுஃமானிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு இத்தகைய வித்தைகளால் உண்மையை பேசுவதை நிறுத்திவிடமுடியாது என்பதை நினைவூட்டியது.

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் நீதித்துறைக்கு சவால் விடுகிறார்.

”ராமர் கோவில் அதே இடத்தில் (அயோத்தி) கட்டப்படும். அங்கு வேறு எதுவும் கட்டப்படாது” என்று கூறிய ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி மீது நடவடிக்கை கோரும் இன்னொரு தீர்மானம் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு உடனடியாக அங்கு கோயில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இத்தகைய கருத்துக்கள், நீதித்துறை மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீதான சங்கபரிவாரின் இழிவான அணுகுமுறையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ராமர் கோயிலை என்ன விலைகொடுத்தும் கட்டியெழுப்ப சங்கபரிவார் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கவலைப்படாது அல்லது தங்களுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்பது இந்த அச்சுறுத்தலிலிருந்து தெளிவாகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாபரி மஸ்ஜித் – ராம ஜென்மபூமி உரிமை மூல வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தன்னாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் மற்றும் இதர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இடதுசாரி கட்சிகள் ஏழைகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மற்றொரு தீர்மானத்தில், இடதுசாரி கட்சிகள் திரிபுரா தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை ஆற்றுவதற்கு தகுதியுடையவை என்பதை நிரூபித்துள்ளதாக தேசிய செயற்குழு கூட்டம் அவதானித்தது. திரிபுரா தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் மாநிலத்தில் சி.பி.ஐ(எம்) ஒரு முக்கிய சக்தியாகவே உள்ளது என்பதை வாக்கு சதவீதம் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான முடிவுகளே கிடைத்துள்ளன. அசாம் தவிர வட-கிழக்கு மாநிலங்களில் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 50 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகளை நாடு தழுவிய போக்கை பிரதிபலிக்கும் முடிவுகள் என்று தவறாக சித்தரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. மகராஷ்ட்ராவில் அண்மையில் அனைத்திந்திய கிசான் சபா தலைமையில் நடந்த விவசாயிகள் போராட்டம் இடதுசாரி கட்சிகளை அவ்வளவு சீக்கிரம் புறக்கணித்துவிட முடியாது என்பதோடு அவர்கள் இன்னமும் ஏழைகளின் குரல்களை எதிரொலிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இடதுசாரி கட்சிகள் தங்களது நாடாளுமன்ற அபிலாஷைகளை கைவிட்டு, விளிம்புநிலை மக்களோடு நின்று அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடுவார்கள் என்று இக்கூட்டம் நம்புகிறது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு சேர்மன் இ.அபுபக்கர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் துணை சேர்மன் ஒ.எம்.ஏ.ஸலாம், பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா, செயலாளர்கள் அப்துல் வாஹித் சேட், அனீஸ் அஹ்மது மற்றும் இ.எம்.அப்துல் ரஹ்மான், கே.எம்.ஷெரீஃப், வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப், பேராசிரியர் பி.கோயா, ஏ.எஸ்.இஸ்மாயீல், முஹம்மது ரோஷன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *