Breaking News

ஜார்கண்டில் தடை என்பது ஃபாஸிச எதிர்ப்பு செயல்பாடுகளை நிறுத்துவதற்கான முயற்சியாகும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ஃபாஸிச சக்திகள் மற்றும் அதன் அரசு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடைபெற்று வந்த இயக்கத்துடைய செயல்பாடுகளை நிறுத்தும் நோக்கத்தோடு ஜார்கண்டில் உள்ள பாஜக அரசாங்கம் இயக்கத்தின் மீது தடையை விதித்துள்ளது என்று மைசூரில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 2015 ல் இயக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, வெறுப்பு பேச்சுக்கள், அடித்து படுகொலை செய்யும் சம்பவங்கள் மற்றும் காவல் துறை அராஜகங்கள் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடுவதில் நமது உறுப்பினர்கள் முன்னணியில் இருந்து வந்துள்ளார்கள். பாகூர் SP மற்றும் ஜாம்தாரா SP ஆகிய காவல்துறை அதிகாரிகளின் அராஜகங்களுக்கு எதிராக இரண்டு வழக்கும் அடித்து படுகொலை செயப்பட்ட ஆறு சம்பவங்கள் உட்பட பல வழக்குகளிலும் இயக்கம் போராடி வந்த சூழலில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியாக போராட வைப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் நம்பிக்கையை வளர்த்து வருகின்றது. மேலும் நீதிக்கான போராட்டத்தில் ஒரு புதிய முன்மாதிரியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஜார்கண்டில் குறிவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நமது இயக்கத்தை அவர்கள் தொந்தரவாக பார்ப்பதால், மனுதாரர்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் வழக்குகளை அழித்துவிடலாம் என்பது அவர்களது கணிப்பாகும். பாதிக்கப்பட்டவர்களுடைய இறுதி நம்பிக்கையாக இருக்கக்கூடிய நீதி பரிபாலன அமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை இந்த கூட்டம் எச்சரித்துள்ளது. உண்மையில் ஜார்கண்ட் அரசு, 1908 CLA சட்டத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் நீதித்துறையை அழிக்க முயற்சிக்கின்றது. தடைக்கு பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போலியான வழக்குகள் தொடுக்கப்படுவது கவலை அளிப்பதாக இருக்கிறது என்றும் இக்கூட்டம் சுட்டிகாட்டுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இயக்கத்துடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன; மேலும் தடையை நீக்குவதற்காக அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட ரீதியான வழிமுறையையே நாங்கள் பயன்படுத்துவோம் என்று தேசிய செயலக குழு கூட்டம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

ராணுவ தலைமை தளபதியின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப்பெற வேண்டும்.
அஸ்ஸாமின் அரசியல் கட்சியான AIUDF வளர்ச்சியை குறித்து கவலை தெரிவித்துள்ள ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்தின் அரசியல் கருத்து உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலக குழு கூட்டம் மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது மிகவும் ஆட்சேபனைக்குரிய ஒன்றாக இருக்கின்றது மற்றும் அவரது பொறுப்பிற்கு பொருத்தமற்ற ஒன்றாகவும் இருக்கின்றது. மேலும் இது இராணுவத்தின் பொறுப்பைக் குறித்து தவறான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயக ரீதியாக செயல்படும் ஒரு அரசியல் கட்சியை குறித்து ராணுவ தலைமை தளபதி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமது அண்டை நாடுகளில், அரசியலில் ராணுவம் தலையிட்டதால் ஜனநாயகம் அழிக்கப்பட்டதை கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்த பொழுது, அவைகளுக்கு  மத்தியில் இருக்கும் வரையறைகள் பேணப்பட்டு வந்ததால் நமது ஜனநாயக மற்றும் இராணுவ ஒருமைப்பாட்டின் பலத்தை கண்டு நாம் பெருமை அடைந்து வந்தோம். தற்போதைய அரசு மற்றும் அதன் பின்னால் இருக்கும் சக்திகள் இதில் திருப்தியடைவதால், அரசியலில் ராணுவம் தலையிட இவர் ஒரு அபாயகரமான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் திரும்பப்பெற வேண்டும் என்று இந்த கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.  

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, தேசிய துணைத் தலைவர்  O.M.A. சலாம், செயலாளர்கள் அனீஸ் அஹமது மற்றும் அப்துல் வாஹித் சேட், E.M. அப்துர் ரஹ்மான் மற்றும் K.M. ஷெரீப் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *