Breaking News

மாபெரும் சந்திப்பு நிகழ்சிகளை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் முடிவுசெய்துள்ளது.

தேசிய இயக்கமாக அறிவிக்கப்பட்டு 11-வது ஆண்டின் நிறைவு தினத்தை முன்னிட்டு மக்களை சந்திக்கும் ஒரு வார நீண்ட பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டம் தீர்மானித்துள்ளது. “மக்களுடன் நாங்கள்; எங்களுடன் மக்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 11 – 16 ஆகிய நாட்களை மக்கள் தொடர்பு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. இதில், அதிக எண்ணிக்கையிலான மக்களை சந்தித்து  இயக்கத்துடைய செய்தியை எடுத்து சொல்லும் விதத்தில் தேசம் தழுவிய பல்வேறு விதமான நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளது. இந்த பிரச்சாரத்தின் வாயிலாக பொது கூட்டங்கள், யூனிட் அளவிலான கொடியேற்ற நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டர்களின் ஒற்றுமை பேரணி மற்றும் அணிவகுப்புகள், சமூக சேவைகள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் போன்ற  நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 11 அன்று இந்தியா முழுவதும் யூனிட்டுகள் சார்பாக வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கவும் மேலும் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு குடும்பங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2018: அறிவிப்புகள் எதார்த்தத்தோடு பொருந்தவில்லை.

மக்களுக்கு கொடுக்கப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகளில் ஒற்றை வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கூட மோடி அரசாங்கம் தோற்றுவிட்டதாக தேசிய செயலக குழு கூட்டம் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ரொக்கப் பணம் மீதான தடை போன்ற அபத்தமான நடவடிக்கைகளால் இந்த அரசாங்கம் தேசத்திற்கு பொருளாதார பேரழிவை கொண்டுவந்துள்ளது. 2018  பட்ஜெட்டுடைய அறிவுப்புகள் தேசத்தின் எதார்த்தத்தோடு பொருந்தவில்லை.இது செல்வந்தர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இது பெரும்பான்மை ஏழை இந்தியர்களுக்கு கூடுதல் சிரமத்தை சுமத்தியுள்ளது.  மருத்துவ உதவி, விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு திட்டங்களின் அறிவிப்புகள் ஏழைகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக போதுமான ஒதுக்கீடு செய்யாதது இது வெறும் வெற்று விளம்பரத்திற்காக சொல்லப்பட்டவை என்பது நிரூபணமாகியுள்ளது. விவசாயிகள் தங்களது கடன்களை திருப்பி செலுத்த சிரமப்பட்டு வரும் சூழலில் கடன் தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஏழை மக்கள் அதிகமாக சார்ந்திருக்கும் பொது சுகாதார நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  இந்த பட்ஜெட் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. இது தனியார் மருத்துவமனை மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பெரும் செல்வந்தர்களான எண்ணிக்கையிலுள்ள மிகச்சிறிய சதவீதத்தினருக்கு நேரடி வரியை உயர்த்துவதற்கு பதிலாக, கார்ப்பரேட்டுகளின் வரியை இந்த பட்ஜெட் குறைத்துள்ளது. அதே சமயத்தில் பொதுமக்கள் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் கூடுதல் மறைமுக வரியை இந்த பட்ஜெட் அறிவித்துள்ளது. கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்ததும் ஆபத்தான நடைமுறையாகும். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. கல்வி சேவையிலிருந்து அரசு பின்வாங்குவது இந்த துறையை மேலும் தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

காஸ்கஞ் தாக்குதல் : கலவர அரசியலை சங்கபரிவார் மீண்டும் கையில் எடுத்துள்ளது.

காஸ்கஞ் வன்முறை மற்றும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான காவல்துறையின் தொடர்ச்சியான அராஜகங்கள் என்பது 2019 தேர்தலை குறிவைத்து கலவர அரசியலை சங்கபரிவார் மீண்டும் ஒருமுறை கையில் எடுத்துள்ளதையே காட்டுகின்றது என்று தேசிய செயலக குழு கூட்டம் சுட்டிக்காட்டுகின்றது. குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட சங்கபரிவார் குண்டர்கள் விரும்பினர் என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளடங்கிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வன்முறையை நிறுத்துவதற்கு பதிலாக காவல்துறை குற்றவாளிகளுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை தாக்குவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது. SR தாராபுரி தலைமையிலான தகவல் அறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படையில், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் 30 கடைகள் கொளுத்தப்பட்டுள்ளன; இவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை ஆகும். அதே சமயம் ஹிந்துக்களுடைய வீடுகள் அல்லது கோவில்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறாத நிலையில் காவல்துறை பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை திட்டமிட்டு கைது செய்துவருகின்றது. அந்த பகுதியிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் காவல்துறையின் அராஜகத்தின் காரணத்தால் திரும்பி செல்ல தயங்குகின்றனர். தேசத்தில் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக மீண்டும் ஒருமுறை கலவரத்தால்  நிரூபிக்க முற்படுகிறது. தற்போது, மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தும் கூட சங்கபரிவாரங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக எதையும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைபாடால் தொடர்ச்சியாக குழந்தைகள் இறந்து வரும் சூழலில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். சிறுபான்மையினரை நோக்கி மக்களின் கோபத்தை திசை திருப்புவதே பாஜக அரசாங்கத்திற்கு இருக்கும் சுலபமான வழியாகும். மதவாத வெறித்தனம் மற்றும் வன்முறையை விட சமூக ஒற்றுமை மற்றும் வளர்ச்சியைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சமீபத்திய குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் இடைதேர்தல்கள் நிரூபித்துள்ளன என்று தேசிய செயலக குழு கூட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமை தாங்கினார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, துணைத்தலைவர் O.M.A. சலாம், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனிஸ் அஹமது, E.M.அப்துர் ரஹ்மான், அப்துல் வாஹித் சேட், A.S.இஸ்மாயில், P.கோயா, K.M.ஷரீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *