Breaking News

குடியரசின் மாண்புகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்! – பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில தலைவரின் குடியரசு தின வாழ்த்து செய்தி!

உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெருமையை தன்னகத்தே கொண்டிருக்கும் நமது நாடு 69-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக குடியரசு தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாகங்களும், துயரங்களும் நிறைந்த நீண்ட நெடிய சுதந்திர போராட்டத்தின் பலனாக கிடைத்த சுதந்திரத்திற்கு பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பெருமைகளைப் பற்றிக் கூற பல விஷயங்கள் இருந்தாலும் உலகம் மொத்தமும் நம்மை திரும்பிப் பார்க்கச் செய்வது இந்தியாவின் பன்முகத் தன்மை எனலாம். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட மக்களை உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு ஒன்றிணைந்த தேசமாக நமது நாடு திகழ்வது உலகிற்கே எடுத்துக்காட்டாகும். ஆனால், பாசிச சங்கபரிவார சக்திகளின் அரசியல் எப்பொழுது அரியணை ஏறியதோ அன்றிலிருந்து இந்த தேசத்தின் பன்முகத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் மத உரிமைகளில் தலையிடுவது, அவர்களின் தனியார் சட்டங்களில் தலையிட்டு கிரிமினல் குற்றவாளிகளாக மாற்ற முயற்சிப்பது, கலாச்சாரங்களையும், மத அடையாளங்களையும் அழிக்க முயற்சிப்பது என வகுப்புவாத சித்தாந்தம் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறி வருவதை காண்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிகளை ஒடுக்குவதும், அவர்களின் தலைவர்களை கைதுச் செய்வதும், அவதூறான செய்திகளை பரப்புவதும் தொடர்கதையாகிவிட்டது.

இந்திய குடியரசில் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பிரிவினர் கார்ப்பரேட்டுகள் மட்டுமே. அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு மத்திய அரசு பெரும்பாடுபட்டு வருகிறது. அண்மையில் சர்வதேச நிறுவனமான ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, ’உலகில் உள்ள மக்களின் வருமானம்’ குறித்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள் மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்பாமின் சிஇஓ (CEO) நிஷா அகர்வால் கூறுகிறார். வளர்ச்சி என்ற முழக்கத்தை எழுப்பி ஆட்சிக்கு வந்தவர்கள் யாருடைய வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள் என்பதற்கு இந்த அறிக்கை ஒன்றே போதும். பெரு நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடி, நிலம் கையகப்படுத்தும் சட்டம், அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான விலை உயர்வு, தொழிலாளர் சட்ட திருத்தம் என்று கார்ப்பரேட்டுகளுக்காக உழைக்கும் அரசாகவே இந்த அரசு திகழ்கிறது. இது நமது குடியரசின் அவலமாகும். விவசாயிகள், தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால் நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், பங்குபோடும் முதலாளித்துவம் (குரோனி கேபிடலிசம்) உருவாகவும்  வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் குறித்து அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை.

நமது ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாகிய நீதித்துறை இன்று நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அண்மைக்காலமாக நடக்கும் அசாதாரண நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் மூத்த முக்கிய 4 நீதிபதிகளே நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு  பத்திரிகையாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது குஜராத்தில் நடந்த சொராஹ்புதீன் சேக் போலி என்கவுண்டர் வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி லோயாவின் மர்மமான மரணம் தொடர்பான வழக்கு  என்பது பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. நீதிமன்றங்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக அதன் நடவடிக்கைகளில் தலையிடுவது, நீதிபதிகளிடம் செல்வாக்கை செலுத்த முயற்சிப்பது போன்ற இழிவான செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் அரசியல் சாசனம் மத்தியில் கூட்டாட்சி முறையை வலியுறுத்துகிறது. மாநில அரசுகளின் ஒன்றியமே மத்திய அரசு என அது கூறுகிறது. ஆனால், இன்றைய அரசு மத்தியில் அதிகாரங்களை குவித்து, மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. மாநில அரசுகளின் மாற்றுக் கருத்துக்களையோ, எதிர்ப்புக்களையோ மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இந்தி அல்லாத மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட மாநிலங்களில் இந்தியை திணிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு ’ஒரே தேசம்! ஒரே கலாச்சாரம்!’ என்ற முழக்கத்துடன் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி மத்திய அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் போக்காகும்.

மத்தியில் மோடியின் ஆட்சியின் கீழ் புலரும் விடியல்கள் சுபச் செய்தியை தரவில்லை. தனிப்பட்ட நலன்கள் மற்றும் வர்த்தக ரீதியான நலன்களுக்காக தேசிய ஊடகங்கள் ஆட்சியாளர்களின் பாசிச போக்கு மற்றும் பெருநிறுவன சேவைகளுடன் சமரசத்தை கடைப்பிடிப்பதோடு அவர்களின் குரலாகவே ஒலிக்கின்றன. இங்குதான் மெல்லிய குரல்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. இது மக்களுக்கான காலம். பாசிச பயங்கரவாதத்திடமிருந்து தேசத்தை பாதுகாப்பது மக்களின் கடமை. ஜனநாயகத்தை கொலைச் செய்ய பாசிச சக்திகள் தீவிர முயற்சிகளில் ஈடுபடும்போது அவர்களை தடுத்து நிறுத்தி குடியரசின் மாண்புகளை பாதுகாத்திட இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *