Breaking News

பேருந்து கட்டண உயர்வு எனும் சுமையை மக்கள் முதுகில் ஏற்றாதே : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களையும், சேவைகளையும் வழங்குவதே அரசின் அடிப்படை கடமை. ஆனால், சமீப காலமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளை கூட  இலாப நோக்குடனே அரசு அணுகுவது கண்டனத்திற்குரியது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய பேருந்து கட்டண உயர்வை பார்க்க வேண்டியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் பல்வேறு செலவினங்களை இதற்கு காரணமாக தமிழக அரசு சுட்டிக்காட்டுகின்றது. இலாபத்தை பெற்றுத் தரும் அரசு நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து சேவையை சுமையாக மாற்றி மக்கள் முதுகில் ஏற்றும் நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், அரசு அறிவிப்பில் கூறியுள்ளது போல மலை பாதைகள் வழியாக செல்லும் பேருந்தின் கட்டணத்தை இருபது சதவிகிதம் அதிகரித்திருப்பது மிகவும் வேதனையான அறிவிப்பாகவே பார்க்க முடிகின்றது. ஒரு புறத்தில் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் இன்னமும் முழுமையாக அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் இந்த கட்டண உயர்வை மட்டும் அவர்கள் மீது சுமத்துவது அரசின் முரண்பட்ட முடிவாகவே பார்க்க முடிகின்றது. இறுதியில் இந்த கட்டண உயர்வானது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனும் அறிவிப்பானது நடுத்தர மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையை கூட இழக்க செய்யும் முடிவாகும். மத்திய, மாநில அரசுகள் மக்கள் நல திட்டங்கள் மற்றும் மானியங்களை தொடர்ந்து ரத்து செய்வதும், மக்களின் சக்திக்கு மீறிய வரி சுமைகளை திணிப்பதும், விலைவாசியை உயர்த்துவது போன்ற அரசின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசு உடனடியாக பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற்று இனி வரும் காலங்களில்  மக்களுக்கான அரசாக செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். அரசு விழாக்களின் ஆடம்பர செலவினங்களை தவிர்த்துவிட்டு அத்தியாவசிய தேவைகளை சேவை என்கிற அடிப்படையிலே தொடர்ந்து வழங்க முன்வரவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *