Breaking News

பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலக குழுவில் முடிவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் 09.01.2018 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் எம்.முகம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்கள். மாநில பொதுச் செயலாளர் ஏ.காலித் முகம்மது, துணைத் தலைவர் எம்.முகம்மது சேக் அன்சாரி, செயலாளர்களான ஏ.முகைதீன் அப்துல் காதர் மற்றும் ஏ.முகம்மது ஃபயாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தீர்மானம் 1 : பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட முடிவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடி வருகின்றது. அன்றைய தினத்தில் மாநிலம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக சீருடை அணிந்த ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் திருச்சி, தேனி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் கடந்த காலங்களைப் போன்று மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இம்மாநில செயலக குழு அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 2 : போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் : தமிழக அரசு தொழிலார்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் 

ஊதிய உயர்வு, நிலுவையிலுள்ள ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 6 வது நாளாக நீடித்து வருகின்றது.

இதன் காரணாமாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். இந்நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் பொங்கல் பண்டிகையும் வர இருப்பதால் பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

எனவே, போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடும் சிரமங்களை கருத்தில் கொண்டும் தமிழக அரசு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநில செயலக குழு கேட்டுக்கொள்கின்றது.

feb 17 Poster

 

இப்படிக்கு

ஏ.காலித் முகம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *