Breaking News

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சட்ட விரோதமாக தலையிடும் ‘முத்தலாக் மசோதா’ உள்நோக்கம் கொண்டது : பாப்புலர் ஃப்ரண்ட்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முத்தலாக் மசோதா என்பது முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்காக எடுக்கப்பட்ட சட்ட விரோத நடவடிக்கையாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்கள், முஸ்லிம் பெண்கள் அமைப்புகள், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் அமைப்புகளிடம் எந்தவித கலந்துரையாடல் அல்லது ஆலோசனைகளும் செய்யாமல் இந்த மசோதா வரைவு செய்யப்பட்டுள்ளது. இது விஷயத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் பிரதமருக்கு முன் வைத்த கோரிக்கைகளும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. முஸ்லிம் சமூகத்தினது அனைத்து பிரிவினர்களின் பிரதிநிதியாக விளங்கும் மிகப்பெரிய அமைப்பின் கோரிக்கையை அப்பட்டமாக மறுத்துள்ளது, சிறுபான்மையினர்கள் மீதான நரேந்திர மோடியின் ஏளனமான அணுகுமுறையையே காட்டுகிறது.  

முஸ்லிம் பெண்களுடைய திருமண உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லப்படும் இந்த மசோதா முஸ்லிம் பெண்களின் கருத்துக்களை கூட கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. முத்தலாக் என்பது முஸ்லிம் பெண்களிலுள்ள சிறு சதவீதத்தினர்களை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். ஆயினும், இத்தகைய வழக்குகளில் ஈடுபட்ட ஆண்களை சிறைக்கு அனுப்புவது, பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் கஷ்டத்தையே அதிகப்படுத்தும். ஆகவே, இந்த மசோதாவை பெண்களுக்கு எதிரான மசோதா என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கும்.

சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முத்தலாக்கை சட்டபூர்வமற்றது (Nonlegal) என்று அறிவித்தது, இது பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகச் சிறந்த வழிமுறையாகவும் இருந்தது. சட்டபூர்வமற்ற ஒரு செயலை தண்டனைக்குரிய குற்றமாக எவ்வாறு அறிவிக்க முடியும் என்பதை மசோதாவிற்கு ஆதரவானவர்கள் விவரிக்க வேண்டும். முத்தலாக்கிற்கு எதிரான  மசோதாவை தண்டனைக்குரிய குற்றமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்ததன் மூலம், அரசு இந்த பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக கையில் எடுத்துள்ளது. அதிகமான முஸ்லிம் ஆண்களை சிறைக்கு அனுப்புவதற்கும்; முஸ்லிம் சமூகத்தையும் அதன் அமைப்புகளையும் தவறாக சித்தரிக்கவும் மற்றொரு காரணமாக இந்த மசோதா பயன்படுத்தப்பட போவதாக தெரிகிறது.

முஸ்லிம் சமூகம் மிகவும் குறைவாக உள்ள, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இல்லாத ஒரு சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் சொல்வது போல் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதை விட அடிப்படை உரிமைகளில் குறுக்கிட்டு தொந்தரவு செய்யவும், தனியார் சட்டங்களில் தலையிடுவதற்கும் தற்போதைய மசோதா  வழிவகுக்கும் என்பதை முஸ்லிம் சமூகத்தினர் நன்றாக அறிந்து உள்ளனர். பாலின உரிமை மற்றும் சமத்துவம் போன்ற மேலோட்டமான தத்துவங்களை பார்த்து மதசார்பற்ற சக்திகள் இந்த மசோதாவை ஆதரித்துள்ளனர். மேலும், சமூகத்துடைய கருத்திற்கு மதிப்பளிக்காமல் புறக்கணிப்பது உண்மையில் சமூகத்தை  மேலும்  அந்நியப்படுதுதலுக்கே உதவுகிறது.


இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *