Breaking News

அமெரிக்கா ஒரு அராஜக அரசு என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது: E.அபுபக்கர்

ஜெருசலத்தை இஸ்ரேலுடைய தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இத்தகைய பயங்கரவாத அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையால், தான் ஒரு அராஜக அரசு என்று அமெரிக்கா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளத்து என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ஒரு அராஜக அரசு மற்றொரு அராஜக அரசுடன் ஒத்துழைப்பது மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைக்கும் மற்றும் உலக அமைதிக்கு ஆபத்தாகவும் முடியும். ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நேச நாடுகள் கூட இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கையை அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து ஒரே குரலில் கண்டித்துள்ளனர். இது டொனல்ட் டிரம்ப்பின் பைத்தியகார தனத்திற்கு எதிரான எச்சரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம், யூத மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு புனித தளமாக விளங்கும் ஜெருசலத்துடைய வரலாற்று உண்மையை இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ மாற்ற முடியாது. 1967ல் நடைபெற்ற போரில் ஜெருசலத்தின் கிழக்கு பகுதி இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த ஆக்கிரமிப்பு சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பலத்தை பயன்படுத்தி இஸ்ரேலால் அபகரிக்கப்பட்ட தமது சொந்த நகரத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து சுதந்திரமாக அரசு செயல்படக்கூடிய தலைநகரத்தை ஃபலஸ்தீனியர்கள் விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் ஃபலஸ்தீனியர்கள் பங்குபெறும் பேச்சுவார்த்தை மூலமாக ஜெருசலத்தின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

இதுவரை ஜெருசலத்தில் எந்த நாட்டுடைய தூதரகமும் இல்லை என்பது ஜெருசலத்தை தனது தலைநகரமாக உரிமை கோரும் இஸ்ரேலின் கோரிக்கை தேவையற்றது என்பதற்கு ஆதாரமாக உள்ளது. புதிதாக உருவாகியுள்ள இத்தகைய சூழ்நிலைகள், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு சதியின் பிரிவினைவாத சதிவலையில் சிக்கி தவிக்கும் அரபு முஸ்லிம் நாடுகள் மத்தியில் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்றும் E.அபுபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இப்படிக்கு

மக்கள் தொடர்பு செயலாளர், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம், 
புதுதில்லி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *