Breaking News

புயலில் சிக்கி கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தமிழகத்தை தாக்கிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலுக்கான எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு தரப்பில் முன்கூட்டியே எடுக்காத காரணத்தினால் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை என்பது வேதனையான செய்தி. பல மீனவர்கள் இறந்து சடலங்களாக கரை ஒதுங்கி உள்ளனர். புயல் தாக்கி ஒரு வாரம் கடந்த நிலையிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அரசு தரப்பில் இன்னும் துரிதப்படுத்தப் படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் ஆறுதல் சொல்வதற்கு கூட அம்மக்களை இது வரை சந்திக்க வரவில்லை என்பதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது தங்களுடைய பதவி சுகங்களுக்காக மக்களின் நலனை மோடி அரசிடம் அடகுவைக்கும் அரசா? என்ற கேள்வி எழுகின்றது.

நெடுவாசல், ஜல்லிக்கட்டு, நீட், விவசாயிகளின் கோரிக்கை மறுப்பு, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது என தொடர்ச்சியாக தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் காணாமல் போன விஷயத்தில் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் இன்று மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும், கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

மத்திய, மாநில அரசுகள் இனியும் காலந்தாழ்த்தாமல் காணாமல் போன மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள தமிழக மீனவர்கள் வீடு திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

 
இப்படிக்கு
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *