Breaking News

அவதூறு செய்திகளை பரப்பிய தொலைகாட்சி நிறுவனங்கள் மீது வழக்கு! – பாப்புலர் ஃப்ரண்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றி அவதூறு செய்திகளை ஒளிபரப்பிய இந்தியா டுடே, ஆஜ்தக் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்கு நேஷனல் பிராட்காஸ்டிங் ஸ்டான்டர்ட்ஸ் அத்தாரிட்டி (NBSA)-யில் தொடரப்பட்டுள்ளது.

இந்தியா டுடே, ஆஜ்தக் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக தொடர் கற்பனை செய்திகள், பொய்யான குற்றச்சாட்டுகள், வடிகட்டிய பொய்கள் மற்றும் மூன்றாந்தர செய்திகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பி வந்தது. இயக்கத்தை பற்றி பொதுமக்களிடையே மோசமான எண்ணங்களை விதைப்பதற்கு தீவிர பரப்புரை செய்து வந்தது. 

NBSA என்ற அமைப்பு செய்திகளை வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் ஒளிபரப்பு செய்யப்படும் செய்திகளின் தரத்தை சீர்படுத்தக்கூடிய அமைப்பாகும். மேலும் ஒளிபரப்பு சம்பந்தமான புகார்களை விசாரிக்ககூடிய அமைப்பாகவும் செயல்படுகிறது. ஏதேனும் ஒரு செய்தியை ஒளிபரப்பு செய்யும் போது அவதூறு மற்றும் ஆதாரமில்லாத விஷயம் எதனையும் வெளியிட்டுவிட கூடாது என்றும் குற்றச்சாட்டுகளை உண்மையாக மாற்றும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.

எனினும் பாப்புலர் ஃப்ரண்ட் விஷயத்தில் மேற்கூறிய எந்த நெறிமுறைகளையும் மேற்படி குறிப்பிட்ட 3 செய்தி நிறுவனங்களும் கடைபிடிக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் மீது தாங்களாகவே குற்றச்சாட்டுகளை கிளப்பிவிட்டு தாங்களே விசாரித்து தாங்களாகவே தீர்ப்பும் எழுதிவிட்டனர். 

இந்த செயல்கள் யாவும் மேற்குறிப்பிட்ட நெறிமுறைகளை அலட்சியப்படுத்தி பத்திரிகை தர்மத்திற்கு எதிராக அநீதத்தை அரங்கேற்றியது. பத்திரிகை துறை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக எந்த பாகுபாடின்றி செயல்பட வேண்டிய அமைப்பாகும். ஆனால் தற்போது குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் நெறி தவறி செயல்பட்டு வருகின்றது. இந்த தொலைக்காட்சி நிறுவனங்களால் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பொதுவாக முஸ்லிம்கள் மீது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் உள்ளது.

இருப்பினும் மேற்படி வழக்கு தொடரும் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு பொய்யான பரப்புரைகளை நிறுத்துமாறும் உண்மை செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே தான் மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தகைய பொய்யான செய்திகளை சுயஇலாபத்திற்காக பரப்புரை செய்பவர்கள் மீது எங்களது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரும். மக்களிடையே பொய்யான கருத்து உருவாக்கம் செய்யும் எந்த பரப்புரைகளையும் எந்த நாடும் அனுமதிக்க வில்லை. நீதியை காலில் போட்டு மிதித்து தங்களை தாங்களே நீதிபதிகளாக காட்டி கொள்கின்றார்கள் என்று எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் குறிப்பிட்டார்.

இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *