Breaking News

பாபரி மஸ்ஜித் நீதிக்காக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில்அவர்களின் தலைமையில் திண்டுக்கல்லில் 2017 நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நடந்தது. கூட்டத்தின்  துவக்கமாக  மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் M.முஹமம்து சேக் அன்சாரி, செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர், A.முஹமது ஃபயாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ்காணும்  தீர்மானங்கள்  எடுக்கப்பட்டது.
 
தீர்மானம் 1 : பாபரி மஸ்ஜித் நீதிக்காக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு !

பாபரி மஸ்ஜித் சங்பரிவார பாசிச அமைப்புகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. நமது தேசத்திற்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய இந்த தீவிரவாத  செயலை செய்தவர்கள் ஒருவருக்கு  கூட  இதுவரை  தண்டனை  வழங்கப்படவில்லை. பாபரிக்கான நீதி என்பது எட்டாக்கனியாகவே இதுவரை உள்ளது. தாமதமாகும் நீதி மறுக்கப்படும்  நீதிக்கு சமம். நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்து  அடிப்படையில்  தீர்ப்பு கொடுப்பதும், பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து  தீர்த்துக்கொள்ளலாம்  என கருத்து கூறுவதும் தேசத்தின்  நீதி பரிபாலன  முறைக்கு அப்பாற்பட்ட செயலாகும்.  எப்போது பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்படுகின்றதோ  அப்போதுதான் நமது தேசத்தின் இறையாண்மையும், நீதியும், சிறுபான்மையினரின் உரிமையும் நிலை நிலைநாட்டப்படும். பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது முஸ்லிம்களின் பிரச்சனை  மட்டுமல்ல, இது தேசத்தின் பிரச்சனை ஆகும். எனவே தேசத்தின், நீதி, ஜனநாயகம், இறையாண்மை, பன்முகத்தன்மை,வேற்றுமையில்  ஒற்றுமை போன்ற மாண்புகளை நிலைநாட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து  போராட முன்வர வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 2 : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் ஆளுநரின் போக்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் நோக்கில் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஆய்வு நடத்தியிருப்பதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. ஆளுநரின் ஆய்வு மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். கோவையை தொடர்ந்து திருப்பூரிலும் ஆய்வை தொடர்வது எதேச்சதிகாரப்போக்காகும். இது தமிழகத்தில் இரு தலைமைகளை உருவாக்கி அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் முயற்சி. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி  மத்திய அரசின் மறைமுக தலையீடு அதிகரித்து வரும் வேளையில் ஆளுநரின் செயல்பாடு, மத்திய அரசு, தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட துவங்கியுள்ளதை காட்டுகிறது. பா.ஜ.க அல்லாத அரசுகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தின் அரசியல் சூழலை பயன்படுத்தி தனது வேலையை காட்ட  பா.ஜ.க  துவங்கியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணை நிலை ஆளுநர்கள் மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில் இடையூறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே நிலை தமிழகத்திலும் பரவியுள்ளது. இது தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்படுவதற்கான முன்னோட்டமா? என்ற சந்தேகத்தை எழச் செய்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி அரசு, தங்களை பாதுகாப்பதற்காக மாநில அரசின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துவிடக்கூடாது. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக ஆளுநர் இருந்தபோதிலும் அவருக்கென்று தனியாக அதிகாரங்கள் எதுவும் கிடையாது.இந்நிலையில் அரசு அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக ஆலோசனை நடத்தவோ, பணிகளை ஆய்வுச் செய்யவோ அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை பரிந்துரையின்படியே செயல்படவேண்டும். மாநில சுயாட்சி கொள்கையை மற்ற மாநிலங்களுக்கு கற்றுக்கொடுத்த தமிழகத்தில் ஆளுநர்  மூலம் நேரடியாக ஆட்சி புரிய முயற்சி செய்யும் மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 : ராமேஸ்வரம் மீனவர்கள்  மீது இந்திய கடலோர  காவல்  படையினரே  துப்பாக்கி  சூடு நடத்தியிருப்பதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

ராமேஸ்வரத்திலிருந்து 6  மீனவர்கள் தாங்கள்  வழக்கமாக  மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சியிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்துள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த வீரர்கள் தமிழக மீனவர்களின் படகின் மீது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியதில்  இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். மீனவர்களை கடலோர காவல் படையினர் மேலும் லத்திக் கம்பால் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை அடித்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பகுதியிலும் தாக்குவதும் சுட்டுக் கொல்வதும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெறும் அக்கிரமம் ஆகும். இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையையோ, இலங்கை கடற்படையினரை எச்சரித்ததோ கிடையாது.

தற்போது வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் இந்திய அரசின் அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு இந்திய அரசுக்கு துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணமாகும்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4 : ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்  பிரச்சாரம்.

மாறிவரும் சுற்றுப்புற சூழல் மற்றும் உணவு பழக்க வழக்கம் காரணமாக மக்களின் ஆரோக்கியம் குறைந்து பல்வேறு நோய்களுக்கு சொந்தக் காரர்களாக நாம் மாறிவருகின்றோம். மக்களிடம் ஆரோக்கியம்  குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக டிசம்பர் 15 ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆரோக்கியமான  மக்கள் வலிமையான தேசம் – தேசிய  பிரச்சாரம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மாரத்தான் போட்டிகள், உடற்பயிற்சி வகுப்புகள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சி கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *