Breaking News

பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும்! மசூதி இடிக்கப்பட்டு 25வது ஆண்டுகளாகி விட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் மீண்டும் வலியுறுத்தல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமையில் கேரள மாநிலம் கோழிகோட்டில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

பாபரி மசூதி – என்றும் நம் நினைவில்

சங்பரிவார சக்திகளின் சதித்திட்டத்தின் மூலம் பாபரி மசூதி இடிக்கப்பட்டு 25வது ஆண்டுகளாகி விட்ட நிலையில், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபரி மசூதியை திரும்பக்கட்டக் கோரி நீதிக்காக குரல் கொடுத்திட அனைத்து இந்திய குடிமக்களும் முன் வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் -ன் தேசிய செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. 463 ஆண்டு காலமாக அயோத்தியாவின் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல் இடிக்கப்பட்டதும், திட்டமிட்டு இடிக்கப்படுவதிலிருந்து பாபரி மசூதியை பாதுகாப்பதில் இந்திய சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை தோல்வி அடைந்துள்ளதும் ஒரு தேசிய அவமானமாகும். இந்த துயரச் சம்பவம் நடந்தவுடன் உடனடியாக அரசாங்கமும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒரே குரலில் பாபரி மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், கால் நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது, சங்கபரிவார் பிடியிலிருக்கும் மத்திய, மாநில அரசாங்கங்கள் பள்ளிவாசல் இடத்தில் கோவில் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . மதச்சார்பற்ற சக்திகளும் இந்த விவகாரத்தை வசதியாக ஓரங்கட்ட முயற்சிப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாபரி மசூதிக்கு நீதியை பெற்றுத் தருவது என்பது, வெறும் முஸ்லிம்களின் பிரச்சனைக்கான தீர்வு என்று பார்த்திட வேண்டாம். மாறாக, இது தேசிய பொறுப்பாகும். பாபரி மசூதியை திரும்பக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையில் முஸ்லிம்களுடன் அனைத்து இந்திய குடிமக்களும் ஒன்று சேர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நினைவூட்டியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST போன்ற பேரழிவுகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்!

மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கருப்பு பணத்தை திரும்பக் கொண்டு வருதல் என்ற அறிவிக்கப்பட்ட இலக்கை அடைவதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது நிருபணமாகியுள்ளது. கருப்பு பொருளாதாரத்தில் ரொக்கம் சிறு பங்காக இருப்பினும், ரத்து செய்யப்பட்டுள்ள நோட்டுகளில் 98.8% திரும்ப வந்துள்ளது மேலும் 0.01% கறுப்புப் பணம் கூட ஒழிக்கப்படவில்லை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலனளிக்காத இந்த நடவடிக்கையின் காரணமாக மக்கள் மீது முடிவுறாத சிரமங்களை சுமத்திய மத்திய அரசு கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். GST-ஐ நடைமுறைப்படுத்துதலும் தோல்வியை சந்தித்துள்ளது. GST எந்த பொருட்களின் விலையும் குறைக்கவில்லை மாறாக, விலையேற்றத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது, இது நுகர்வோர் மீதான சுரண்டலுக்கு வழி வகுத்துள்ளது. எதிர்வரும் தேர்தலின் நிர்பந்தத்தால் GST விகிதங்கள் குறைப்பதற்காக எடுக்கப்படும் புதிய நடவடிக்கைகளை இந்த கூட்டம் வரவேற்றுள்ளது. மேலும், இது மக்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என்று இந்த கூட்டம் குறிப்பிட்டுள்ளது.

அஸ்ஸாமில் சிறுபான்மையினர்கள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

குடிமக்களின் தேசிய பதிவு (NRC)ஐ முடிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்ற சூழலில், அஸ்ஸாமில் உள்ள வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தல் இப்பொழுது உச்சகட்டத்தை அடைந்துள்ளது, இந்த துன்புறுத்தலை தடுக்க அனைத்து கட்சிகளும் மனித உரிமை குழுக்களும் முன் வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது. சுமார் 5 மில்லியன் இந்திய குடிமக்களை “illegal migrants – சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்ற பிரிவில் சேர்த்து, “foreigners – வெளிநாட்டவர்கள்” என்று அவர்களை அழைத்து, “Bangladeshis – வங்காளதேசத்து காரர்கள்” மற்றும் “d-voters – சந்தேகிக்கப்படும் வாக்காளர்கள்” என்று வகைப்படுத்தி அவர்களை துன்புறுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அஸ்ஸாமில் குடியிருக்ககூடிய வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்கள், சிறைபிடித்தல் அல்லது நாடு கடத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளால் பயமுறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். அஸ்ஸாமில் இப்பொழுது நடைபெற்று வருவது மனிதாபிமானத்தின் பேரழிவாகும் என்று இந்த கூட்டம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்களுடைய நிலைமை தேசிய பிரச்சனையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டனி உருவாக வேண்டும்!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் எழுந்துள்ள அரசியல் சூழல்களை மதிப்பிடும் போது, பாஜக அரசாங்கத்தால் இழிவுபடுத்தப்பட்ட மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட குழுக்களும், சமூகங்களும் மற்றும் காங்கிரஸும் வலுவான கூட்டணியாக உருவாகி இருப்பதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது. காங்கிரஸ், படிடர், தாகூர் மற்றும் தலித் சமுதாய தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் புரிதல்கள் சிறுபான்மை மற்றும் பிற தாழ்த்தப்பட்ட குழுக்களை உள்ளடக்கிய கூட்டணியாக வலுப்பெற வேண்டும். குஜராத்தில் இப்பொழுது பொதுமக்களுடைய கோபம் சாதிய மற்றும் சமுதாய அடையாளங்களையும் தாண்டி நிற்கின்றது, இது பிரிவினைவாத பாஜகவுடைய மதவாத அரசியலின் உடனடி வீழ்ச்சிக்கான அடையாளமாக தெரிகிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட் குறிப்பிட்டுள்ளது.

பீம் ஆர்மி தலைவர் மீதான NSA –வை (தேசிய பாதுகாப்புச் சட்டம்) திரும்பப்பெற வேண்டும் மேலும் அவர்சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்!

அலகாபாத் உயர் நீதி மன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் ரவன் மீது கொடூரமான தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்திய உத்திர பிரதேச அரசுடைய அராஜக செயல்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய கண்டிக்கின்றது. ஆசாத் ரவனை காலவரையற்ற சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த செயல்பாட்டின் மூலமாக, தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களாக தங்களை காட்டிவரும் இந்த பிராமணிய கட்சி ஒரு தலித் இயக்கத்தை இலகுவாக வளர விடாது என்பது நிதர்சனமாகியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநாடுகளின் வெற்றி மக்களின் ஆதரவை காட்டுகின்றது!

கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநாடுகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு நன்றிகளை தெரிவித்துள்ளது. பெருந்திரளான மக்களும் பல்வேறு பிரிவினரை சார்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு மாநாட்டை மகத்தான வெற்றி பெற வைத்ததன் மூலம், சக்திபடுத்தும் பாதையில் பாப்புலர் ஃப்ரண்ட் உடன் முன்னேற மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட்-ற்கு விரோதமாக இருந்த சக்திகள் இதன் பிறகாவது இந்த இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் குறித்த பாரபட்சமற்ற மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வளர்த்து கொள்வார்கள் என்று இந்த கூட்டம் நம்புகிறது.

இப்படிக்கு

M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *