Breaking News

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது பாப்புலர் ஃப்ரண்ட் கிரிமினல் வழக்கு

இயக்கத்துடைய நற்பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் உள்துறை அமைச்சகத்துடைய அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்கள் கிடைப்பதற்கும்  அல்லது கசிவதற்கும்; மேலும் அதை பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்புவதற்கும் காரணமாக இருந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், அதன் நிருபர்கள், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் (MHA)அதிகாரிகள் ஆகியோர் மீது புதுதில்லி பாராளுமன்ற தெருவிலுள்ள காவல் நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது.
 
முஸ்லிம்கள், சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினர்களை சக்திபடுத்துவதற்காக தேசிய அளவில் பல ஆண்டுகளாக போராடும் நவீன சமூக அமைப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருக்கிறது; மேலும் புது தில்லி, காலிந்தி குஞ்சிலுள்ள தலைமையகத்தை மையமாக வைத்து இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறையில் இயக்கம் செயல்பட்டு வருகிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தில்லி மாநில தலைவர் முஹம்மது பர்வேஸ் அஹமது அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு மாதங்களுக்கு முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்தியை டைம்ஸ் நவ் ஒளிபரப்பியது. அரசுடைய அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்கள் கிடைத்ததால், அந்த ஆவணங்களை விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பியது. 31.8.2017 அன்று இரவு 10.00 மணிக்கு “நியூஸ் ஹவர்” என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் மூத்த ஆசிரியர் திரு. ஆனந்த் நரசிம்ஹன் “………………அறிக்கையிலுள்ள தகவல்களை நாங்கள் ஆய்வு செய்தோம்……….” என்று கூறியுள்ள அதே சமயத்தில் “மிக ரகசியம் வாய்ந்த அறிக்கை கிடைத்துள்ளது”, “பரபரப்பான ரகசிய அறிக்கை கிடைத்துள்ளது” என்ற வாசகங்கள் திரையில் காட்டப்பட்டுள்ளது. விவாதம் தொடர்ந்து நடைபெற்ற பொழுது, தலைமை ஆசிரியரும் அந்த விவாத நிகழ்ச்சியின் நெறியாளருமான திரு. ராகுல் சிவஷங்கர் “……….இதற்கு முன்  ஒருபோதும் பார்த்திராத இரகசிய ஆவணங்களை நான் என் கையில் வைத்திருக்கிறேன்………” என்று கூறியுள்ளார். மேலும் அந்த விவாத நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கையில் “தீவிரவாத தடுப்பு ஏஜென்சியான NIA-விடமிருந்து PFI பற்றிய தகவல்களை MHA கேட்டுள்ளது”, “PFI மீதான வழக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய NIAவின் ஆவணங்கள் MHAவுக்கு அனுப்பப்பட்டுள்ளது”, “மிகவும் ரகசியம் வாய்ந்த அறிக்கை கிடைத்துள்ளது”, “PFI பற்றிய NIAவின் மதிப்பீடு டைம்ஸ் நவ்-க்கு கிடைத்துள்ளது” என்ற வாசகங்கள் திரையில் காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது நிகழ்வு, 27.9.2017 அன்று இரவு 8 மணிக்கு “இந்தியா அப்ஃப்ரண்ட் (India Upfront)” என்ற தலைப்பில் மற்றொரு விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் திரு. ராகுல் சிவ்சங்கர் ஒரு அறிக்கையை காட்டி “……………..நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து எங்களுக்கு இது கிடைத்துள்ளது, இன்னும் சில நாட்களில் PFI தடை செய்யப்பட உள்ளது, நிகுஞ் “என்னுடைய கையிலுள்ள இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை நமது பார்வையாளர்களுக்கு விவரியுங்கள்” என்று கூறியுள்ளார். பின்னர், டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் நிருபர் திரு. நிகுஞ் கர்க், “ராகுல், தேசத்தின் முதன்மையான தீவிரவாத எதிர்ப்பு குழுவான தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), கேரளா போலீஸ் மற்றும் பிற சட்ட ஒழுங்கு,அமலாக்கம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடைய அறிக்கைகள் உள்ளடக்கிய இந்த MHAவுடைய ஆவணங்கள் மீதான விசாரணையால் மிகவும் மோசமான இரண்டு முடிவுகள் எடுக்கப்படும், தடை விதிக்கப்பட்ட பிறகு அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும், மேலும் குறிப்பிட்ட சில நாட்களில் PFI தடை செய்யப்படும். அதனால் தான் இப்பொழுது இதை மீண்டும் நாம் பார்க்க தொடங்கியுள்ளோம்………..” என்று கூறியுள்ளார். மேலும் திரு.நிகுஞ் கர்க் தொடர்கையில்: “……………………..இதை நான் சொல்லவில்லை அல்லது நீங்களும் சொல்லவில்லை இது அமைச்சகத்துடைய ஆவணங்களின் ஒரு பகுதியாகும், இன்று இது நமக்கு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் முஹம்மது பர்வேஸ் அஹமது அளித்த புகாரில்: ‘தேசத்தின் சட்ட வழிமுறையின் மீதும், சட்டத்தின் மீதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. NIA உட்பட அனைத்து ஏஜென்சிகளுடைய விசாரணையை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் தொலைகாட்சியில் குறிப்பிடப்பட்ட அனைத்து பொய் குற்றச்சாட்டுகளிலும் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட மேலே கூறப்பட்ட தகவல்களை வைத்து பார்க்கும் போது; ஒன்று MHAவிடமிருந்து அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்களை டைம்ஸ் நவ் திருடி இருக்க வேண்டும் அல்லது MHAவில் உள்ள சிலரால் அது கசியவிடப்பட்டிருக்க வேண்டும்; மேலும் அதை பொது மக்களுக்கு ஒளிபரப்பியது தேச விரோத செயலாகும். அரசின் நிர்வாக நெறிமுறை, இரகசியம் மற்றும் ஊடக நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதால் இது சட்டத்தின் தண்டனை விதிகளுக்கு உட்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, திரு. ஆனந்த் நரசிம்ஹன், திரு. நிகுஞ் கர்க், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் இதில் ஈடுபட்ட MHA அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR)-ஐ பதிவு செய்ய வேண்டும். மேலும் சட்டப்படி சரியான பிரிவுகளின் கீழ் கிரிமினல் விசாரணையையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இப்படிக்கு 
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்,
புது தில்லி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *