Breaking News

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது! தொடரும் சட்டவிரோத கைதுகள்! தமிழக காவல்துறையின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது : பாப்புலர் ஃப்ரண்ட்!

அரசின் அவலங்களை விமர்சிக்கக் கூடியவர்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடியவர்களை காவல்துறை திட்டமிட்டு குறிவைத்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.

அந்த வகையில் நெல்லையில் கந்துவட்டி கொடுமையினால் ஒரு குடும்பமே தங்களது உயிரை தீக்கிரையாக்கி கொண்ட சம்பவத்தில் அரசின் கையாலாகாத்தனத்தை விளக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக நேற்று (05.11.2017) கார்ட்டூனிஸ்ட் பாலா சட்டவிரோத அடிப்படையில் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் நேற்று முன்தினம் (04.11.2017) வள்ளியூரில் கூடங்குளம் மக்களுக்காக சட்டப் போராட்டங்களை நடத்திவரும் வழக்கறிஞர் செம்மணி சட்டவிரோத அடிப்படையில் வீட்டிலிருந்து குண்டுகட்டாக இழுத்துச் செல்லப்பட்டு இராதாபுரம் காவல்நிலையத்தில் சட்டவிரோதகாவலில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த செப்டம்பர் 18ம் தேதி தோழர் முகிலன் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் சீருடை அணியாத காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டு குண்டுகட்டாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும் உரிய நீதிமன்ற ஆவணங்களை காண்பித்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைது செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் இதுபோன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு சட்டத்தின் நீதியை நிலைநாட்டி தங்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள்மன்றத்தில் உறுதிப்படுத்துமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு

A.முகைதீன் அப்துல் காதர்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *