Breaking News

ரகசிய கேமரா செய்தியின் பின்னணியில் கிரிமினல் சதித்திட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

கடந்த சில மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை குறிவைத்து மத்திய அரசின் ஏஜென்சிகள் நடத்திவரும் சூழ்ச்சியான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இந்தியா டுடே நடத்திய ரகசிய கேமரா ஆபரேசன் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அமைப்பிற்கு எதிராக என்.ஐ.ஏ உள்ளிட்ட ஏஜென்சிகள் நடத்திய விசாரணைகள் திசை தெரியாமல் முடங்கியதை தொடர்ந்து போலியாக ஆதாரங்களை உருவாக்குவதற்காக வேண்டி வடிவமைத்த திரைக்கதையின் ஒரு பகுதியே இந்தியா டுடேயின் ரகசிய கேமரா ஆபரேசன் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச் செயலாளர் சி.பி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.

அமைப்போடு தொடர்பு இல்லாதவர்களிடம் நடத்திய தனிப்பட்ட உரையாடலில் இருந்து சில பகுதிகளை வெட்டியெடுத்த பிறகு பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான கேள்விகளை இணைத்து செய்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்தவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர். செய்தி வெளியான உடனேயே சற்றும் தாமதிக்காமல் மத்திய அமைச்சர், என்.ஐ.ஏ செய்தி தொடர்பாளர், பா.ஜ.க தலைமை ஆகியோர் ஒருமித்த கருத்தை தெரிவித்தது முன்கூட்டியே தயாரித்த திட்டத்தின் ஒரு பகுதி என்பதை தவிர வேறொன்றுமில்லை

போலியான செய்தியை தயாரிக்க முயற்சித்த காரணத்தால் இன்னொரு ஊடக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இந்தியா டுடேவுக்காக ரகசிய ஆபரேசனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் செய்தியின் நம்பகத்தன்மையே இழக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடலின் மூலம் தங்களுக்கு தேவையான பதில்கள் கிடைத்த பிறகு பாப்புலர் ஃப்ரண்டுடன் தொடர்புபடுத்தும் கேள்விகளை பின்னர் இடைச்செருகலாக சேர்த்துள்ளனர். அரசு ஏஜென்சிகளுடன் கூட்டு சேர்ந்து இவ்விவகாரத்தில் சதி ஆலோசனை நடந்துள்ளது. இதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

ஹாதியா உள்ளிட்ட வழக்குகளில் வலுவான சட்டரீதியான போராட்டங்களை நடத்துவதும், சங்க்பரிவார தலைமையிலான இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதுமே பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணம் ஆகும். முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் கூடிய இத்தகைய நடவடிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜனநாயகரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்கொள்ளும்.

நாட்டின் சட்டங்களுக்கு எதிரான எந்தவொரு செயல்பாடுகளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்திட்டத்தில் கிடையாது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தவிர கால்நூற்றாண்டை கடந்த இயக்கத்தின் பணிகளில் தேசத்திற்கு எதிரான எந்தவொரு செயலையும் நிரூபிக்க இயலவில்லை.

பாப்புலர் ஃப்ரண்டின் பணிகளுக்கு தடை போட மத்தியில் நடக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நாங்கள் சொல்வது என்ன? என்ற கருப்பொருளில் நடந்து வரும் பிரம்மாண்ட மாநாடுகளில் லட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளனர். இந்த மக்கள் ஆதரவை தகர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியே ஒரு பிரிவு ஊடகங்களை பயன்படுத்தி நடத்தும் இந்த தரம் தாழ்ந்த நடவடிக்கையாகும். குறுகிய நலன்களுக்கு அடிபணிந்து ஊடக தர்மத்தை பலிக்கொடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக ஊடக உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய செய்திகளை குறுகிய நோக்கோடு இதர இயக்கங்கள் ஏற்றுக்கொள்வது நல்லதல்ல என்று சி.பி.முஹம்மது பஷீர் கூறினார்.
 
இப்படிக்கு

மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *