Breaking News

மத்திய சட்ட அமைச்சரின் கருத்துக்கள் வெட்கக்கேடானது : பாப்புலர் ஃப்ரண்ட்!

இந்தியா டுடே ஸ்டிங் ஆப்ரேஷன் என்று கூறப்படுகின்ற நடவடிக்கையின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து ஒளிபரப்பிய அவதூறான செய்தியை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்து வெட்கக்கேடானது. மேலும், மத்திய அமைச்சர் என்ற அவருடைய பொறுப்பிற்கு இது முற்றிலும் பொருத்தமற்ற ஒன்று என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E. அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

வீடியோவுடைய நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கேரளாவில் கட்டாய மத மாற்றத்தில் முஸ்லிம் அமைப்புகள் ஈடுபடுவதாக அமைச்சர் அவசரப்பட்டு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தனிநபர்கள் தொழில் ரீதியாக பத்திரிகை நடத்திக்கொண்டு ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற சமூக அமைப்புகள் மீது பரப்பும் நம்பமுடியாத செய்திகள் மீது மத்திய அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் காட்டும் ஈடுபாடு மிகவும் வேடிக்கையாக உள்ளது.

இயக்கத்தை முடக்குவதற்கான காரணங்களை திரட்டுவதில் அமைச்சர்களும் அரசாங்கமும் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்ற செய்தியைத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டி வருகின்றது. விலை பேசப்பட்ட ஊடக நிருபர்கள் மற்றும் சேனல்களை பயன்படுத்தி இது போன்ற செய்திகளை இட்டுகட்டவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் அனைத்து ரீதியிலும் இந்திய அரசியலமைப்பு விழுமியங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் அமைப்பாகும். விசாரணை அறிக்கைகள் என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து தற்பொழுது பரப்பப்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியாக புனையப்பட்டதாகும். இத்தகைய புனையப்பட்ட ஆதாரங்களை தவிர வேறெதுவும் எங்களுக்கு எதிராக இல்லை என்பதற்கு இந்த வீடியோக்கள் சாட்சியாக உள்ளது. அவர்களுக்கு சிறிதளவாவது மனசாட்சியும் தார்மீக நெறிகளும் இருக்குமானால், எடிட் செய்யப்படாத முழு வீடியோவை வெளியிடுமாறு அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் இந்திய டுடே தொலைக்காட்சிக்கு நாங்கள் சவால் விடுக்கின்றோம்.

இப்படிக்கு

ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *