Breaking News

பா.ஜ.க. அரசின் நிர்வாக தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் வகுப்புவாத பிரிவினை முயற்சிகள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை!

மத்திய பா.ஜ.க அரசின் மோசமான நிர்வாக தோல்விகள் குறித்து தேசம் முழுவதும் நடைபெற்று வரும் விவாதங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வேண்டி, வரவிருக்கும் தேர்தல்களில் மக்களை பிளவுபடுத்தும் திட்டத்துடன் வகுப்புவாதத்தை பயன்படுத்த தீவிரமான முயற்சிகளை சங்பரிவார் அமைப்புகள் மீண்டும் மேற்கொண்டு வருகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பா.ஜ.க அரசுடைய செயல்பாடுகள் அனைத்து நிலைகளிலும் வரலாற்று ரீதியான தோல்வியை சந்தித்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் செல்வந்தர்களுடைய நலனுக்காக மட்டுமே அரசு சேவை செய்து வரும் சூழலில், ரூபாய் நோட்டுகள் மீதான தடை மற்றும் GST போன்ற மக்கள் விரோத கொள்கைகளால் பெரும்பான்மையான மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் மருத்துவமனையில் குழந்தைகள் தொடர்ந்து இறந்து வரும் நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத நிகழ்சிகளை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த மக்களே இந்த அபாயத்தை உணர்ந்து விழிப்படைந்து வருகின்றனர். சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வருத்தமளிக்கக்கூடிய எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் இதையே உறுதிபடுத்துகிறது.

பா.ஜ.க-வின் வழக்கமான யுக்தியான மக்களை பிளவுபடுத்தும் வகுப்புவாதத்தை பயன்படுத்தினால் மட்டும் தான், இத்தகைய தோல்விகளிலிருந்து பாஜக மீண்டு வர முடியும். இந்த அடிப்படையில்தான் பா.ஜ.க-வின் பல்வேறு தலைவர்கள் இப்பொழுது அயோத்தியா மற்றும் ராம் மந்திர் போன்ற ஹிந்து மதவாத உணர்வுகளை தீவிரமாக தூண்டிவிட்டு வருகின்றனர். தாஜ் மஹாலின் பாரம்பரியத்தை விமர்சித்து பா.ஜ.க-வின் சாதாரண தலைவர்கள் கூட விஷமத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருவதும் எதிர்வரும் மாநிலத் தேர்தல்களின் பின்னணியில் மக்களுடைய கோபத்தை திசை திருப்பும் அஜெண்டாவின் ஒரு பகுதியாகும். பிரதமரும் மற்ற கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் மெளனம் காத்து இந்த புதிய சர்ச்சைகளை ஊக்குவித்து வருகின்றனர்.

வகுப்புவாத அரசியலை புறக்கணித்து,தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் பா.ஜ.க-வை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த ஒன்றாக நிற்குமாறும், இத்தகைய தீய சக்திகளை குறித்து தேசத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *