Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாபெரும் உரிமை முழக்க மாநாடு! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அழைப்பு!

உரிமை முழக்க மாநாட்டை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (04 அக்டோபர் 2017) காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, மாநில துணைத்தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கூறும் போது :
 Press Meet 1@ Chennai 2

 

மத்தியில் ஆளும் மதவாத பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை முன் வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றது. இந்திய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி மனித உரிமைகளுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தல் இவர்களின் ஆட்சியில் உள்ளது.
 
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவோ, மோடிக்கு எதிராகவோ யார் பேசினாலும் அல்லது போராடினாலும் அவர்களுக்கு தேசத்துரோகப் பட்டம் வழங்கப்படுவதும், அவர்கள் மீது UAPA போன்ற கருப்பு சட்டங்கள் பாய்வதும் வாடிக்கையாகிவிட்டது. சமூக எழுத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத ஃபாசிசவாதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது வாடிக்கையான நிகழ்வாகிறது.

தற்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தேச விரோத சக்திகளாக பூதாகரமாக்கும் முயற்சிகள் முழுவேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் இப்போது தேசிய அளவில் செயல்பட்டு வரும் மாபெரும் சமூக பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பூதாகரமாக்கி அதன் பணிகளை முடக்குவதற்கான சதித்திட்டம் ஒன்றை மத்திய பா.ஜ.க அரசு இப்போது செயல்படுத்தி வருகின்றது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு என்.ஐ.ஏ வை அது ஆயுதமாக பயன்படுத்தி சில அறிக்கைகளை ஆங்கில ஊடகங்களில் கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கசியவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற தேசிய புலனாய்வு முகமை NIA அறிக்கையில் கேரளாவில் மூவாட்டுப்புழா மற்றும் நாராத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் தீவிரவாத செயல்கள் என்று குறிப்பிட முடியாது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கமாகவோ அல்லது அதன் தலைவர்களோ இதில் ஈடுபடவில்லை என்று விசாரணை நீதிமன்றம் மூவாட்டுப்புழா வழக்கில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வழக்கில்  UAPA பிரிவுகளை கேரளா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதற்கான NIAவின் முறையீடுகளையும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத மாற்றம் செய்து வருகின்றது என்று கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஹாதியா என்ற பெண்ணின் வழக்கு விவாதாக பொருளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு என்றும் பரப்பப்பட்டு வருகின்றது.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் சிமியின் மறுவடிவம் என்ற அபத்தமான கோட்பாடு கடந்த காலங்களில் மறுக்கப்பட்டுள்ளது. சிமி இயக்கம் தடை செய்யப்பட்டதாக 2001-ம்  ஆண்டு  அறிவிக்கப்பட்டது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட்-ன் முன்னோடியான நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் (NDF) துவங்கப்பட்டதோ 1993-ம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு திறந்த புத்தகம், கடந்த காலங்களில் அதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிருபிக்கப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

கல்வியறிவு மேம்பாடு மற்றும் வறுமை ஒழிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் அரசுகளுடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் தேசம் சந்தித்து வரும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் ஃபாஸிசம் சம்பந்தமான பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். இதன் காரணத்தினால்தான் இந்த இயக்கம் மத்திய அரசால் குறிவைக்கப்பட்டு வருகின்றது.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த முயற்சிகளை ஜனநாயக மற்றும்  சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வது என பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்துள்ளது. ஹிந்துத்துவ குண்டர்களுடைய வெறுப்பு சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவும், பணமதிப்பிழப்பு சாகசங்கள் உட்பட ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ள மத்திய அரசின் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களை நேரடியாக சந்திப்பதன் மூலமாகவும், ஜனநாயக மற்றும் சட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாகவும் இத்தகைய ஒடுக்குமுறைகளையும், அவதூறு பிரச்சாரங்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து எதிர் கொள்ளும்.

இத்தகைய மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று அதன் முகத்திரையை கிழிக்கும் விதமாகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வருகின்ற அக்டோபர் 7 அன்று மதுரையிலும், அக்டோபர் 8 அன்று சென்னையிலும் நாங்கள் சொல்வது என்ன? (We also have something to say) என்ற முழக்கத்துடன் மாபெரும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்தப்பட இருக்கின்றது. அந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கெடுக்க உள்ளனர். அந்த மாநாட்டிற்கு பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அலைகடலென திரண்டு வந்து தங்களின் ஆதரவை தெரிவிக்கும் படி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

M. முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா,
தமிழ்நாடு.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *