Breaking News

சென்னை மற்றும் மதுரையில் உரிமை முழக்க மாநாடு! – பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இன்று (17/09/2017) தேனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர், A.முஹம்மது பயாஸ், S.அஹமது நவவி, மாநில பொருளாளர் வழக்கறிஞர் N.M.ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக போராடி வருகின்றனர். மத்திய பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகள் மூலம் கடுமையான பாதிப்புகளையும் நஷ்டங்களையும் அடைந்து வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நம்பி முதலில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் மீண்டும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது நடந்துவரும் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் மத்திய அரசு முடக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராடும் விவசாயிகளை இதுவரை சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் பிரதமர் மோடி செயல்பட்டு வருகின்றார். தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 : உரிமை முழக்க மாநாடு!

நமது இந்திய அரசியல் சாசன சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. தற்போது ஆளும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்கு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்க கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. ஒருவர் எந்த உணவை உண்ண வேண்டும் என மத்திய அரசு தீர்மானிக்கும் நிலையை நாம் பார்த்து வருகின்றோம். பா.ஜ.க மற்றும் RSS -ன் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்ச்சிக்க கூடியவர்கள் மிரட்டப்படுவதும், கைது செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தேசத்தில் தொடர்கதையாக மாறியுள்ளது. பா.ஜ.க மற்றும் RSS-ஐ விமர்சனம் செய்யக்கூடிய இயக்கங்களை முடக்கக்கூடிய ஜனநாயக படுகொலையையும் இந்த அரசு நிகழ்த்தி வருகின்றது. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என அரசியல் அமைப்பு சாசன சட்டம் உரிமை வழங்கியுள்ள நிலையில் மதம் மாறி திருமணம் செய்வது தேச துரோக குற்றமாக சித்தரிக்க கூடிய வேலையை தற்பொழுது மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அரசியல் அமைப்பு சாசன சட்டம் குடிமக்களுக்கு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்தும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் வரும் அக்டோபர் மாதம் 07-ம் தேதி மதுரையிலும், 08-ம் தேதி சென்னையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் உரிமை முழக்க மாநாட்டை சிறப்பாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இந்த மாநாட்டில் பங்கெடுத்து இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் வழங்கிய உரிமையை பாதுகாக்க கரம் கோர்க்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தீர்மானம் 3 : நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்!

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து இந்தாண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் தொடர்ந்து தமிழக விரோத போக்கில் ஈடுபட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இதனை சற்றும் கவனத்தில் கொள்ளவில்லை. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்ற வாசல்களில் ஏறியபோதும் விலக்கு அளிக்கப்படாததால் திறமை இருந்தும் மருத்துவ இடம் மறுக்கப்பட்ட மாணவி அனிதா தனது உயிரையே மாய்த்துக் கொண்டார். இதுவரை இல்லாத அளவில் தமிழக அரசு பள்ளிகளில் இருந்து ஐந்து மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில்  மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் நீட் விவகாரத்தில் மாநில அரசாங்கமும் உறுதியான தெளிவான நிலைப்பாட்டை எடுத்து மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

SGA (3) SGA (1)


 
இப்படிக்கு,
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *