Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட்டின் பணிகளை முடக்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்! – பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அறிக்கை!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13-09-2017 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேசிய அவர், சமீபகாலமாக ஊடகங்களில் ஒரு பிரிவினர், பாப்புலர் ஃப்ரண்ட்டின் பணிகளை முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இத்தகைய முயற்சிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது என இயக்கம் தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், இயக்கத்துடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விளக்கும் விதமாக தேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், அதிகாரத்திலிருக்கும் வலது சார்பு ஹிந்துத்துவ அரசு, போலியான பிரச்சாரம் மற்றும் தவறாக சித்தரித்தல் உட்பட அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகள் மூலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை முடக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். என்.ஐ.ஏ. அமைப்பால் உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற ஆவணங்களின் அடிப்படையில், பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான பரபரப்பான கதைகளை உள்ளடக்கிய புதிய அத்தியாயத்தை டைம்ஸ் குழுமத்தை சார்ந்த பல்வேறு ஊடக நிறுவனங்கள் பரப்பி வருகிறது. என்.ஐ.ஏ.வின் இந்த ஆவணம் 2008ல் திருத்தம் செய்யப்பட்ட UAPA  சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தேசிய தலைவரும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத்தலைவருமான மௌலானா ஜலாலுத்தீன் உமரியுடைய வார்த்தைகளை தவறாக மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியதன் மூலம் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியின் பிரச்சாரம் கீழ்த்தரமானது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முக்கியமாக, என்.ஐ.ஏ.வின் அறிக்கையில் உள்ளதாக சொல்லப்படுகின்ற பின்வரும் நான்கு குற்றச்சாட்டுகள்  இயக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் ஆபாசமான மொழியில் சித்தரித்த கல்லூரி பேராசிரியர் மீதான உள்ளூர் தாக்குதல் ஆகும். இத்தகைய சம்பவத்திற்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அந்த சமயத்திலேயே பாப்புலர் ஃப்ரண்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டது. 

இரண்டாவதாக கேரள மாநிலம் நராத் என்ற இடத்தில் நடந்த  நிகழ்ச்சியாகும். இது இயக்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற வருடாந்திர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயக்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு ஆயுத பயிற்சி முகாம் என்ற கதை கட்டிவிடப்பட்டது. இந்த வழக்கிற்கு UAPA பயன்படுத்தப்பட்டதை கேரள உயர் நீதிமன்றம் திரும்பப்பெற்றது. மேலும், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான என்.ஐ.ஏ.வுடைய மேல்முறையீட்டை  உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூட இல்லை. 

பாப்புலர் ஃப்ரண்ட் தனது உறுப்பினர்களை சிரியா மற்றும் இராக்கில் செயல்படும் ISIS இயக்கத்திற்காக ஆட்களை தேர்வு செய்கின்றது என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். 18 கோடி இந்திய முஸ்லிம்களில் வெறும் 60 நபர்கள் மட்டுமே சிரியா அல்லது ஆப்கானிஸ்தானிற்கு புறப்பட்டதாக நம்பப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலமாக அவர்களின் பக்கம் இளைஞர்களை ஈர்க்க சதி செய்யும் ISIS போன்ற இரகசிய இயக்கங்களை குறித்து போதுமான அளவிற்கு தனது உறுப்பினர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை செய்துள்ளது என்பது தான் உண்மை. அத்தகைய அமைப்புகள் மீது அனுதாபம் காட்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அப்பொழுதே இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அத்தகைய நேரங்களில் உறுப்பினர்களுக்கு இயக்கத்துடைய கொள்கைகள் தொடர்பாக  சுற்றறிக்கை மூலமாக நினைவூட்டுதலும் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக  மஞ்சேரியிலிருக்கும் இஸ்லாமிய கல்வி நிறுவனமான சத்யசாரணியை ‘லவ் ஜிஹாதுடன்’ தொடர்புபடுத்தும் முயற்சியாகும். இது ஹிந்துத்துவ  சக்திகளால் உருவாக்கப்பட்ட, முற்றிலும் எந்த அடிப்படையும் இல்லாத இனவெறி பிரச்சாரமாகும். இஸ்லாத்தை ஏற்றுக்  கொண்ட ஹாதியா என்ற பெண் இஸ்லாமிய கல்வியை கற்க தனது விருப்பத்திற்கு ஏற்ப சத்தியசாரணியில் சேர்க்க உத்தரவிட்டது கேரள உயர் நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்சாகும். அதே நீதிமன்றம் தான் ஹாதியாவுடைய உள்ளூர் பாதுகாப்பாளராக A.S ஜைனபாவை தீர்மானித்தது. சத்தியசாரணி என்பது மத மாற்றம் செய்யும் மையம் கிடையாது. மாறாக, அது ஒரு கல்வி மையம். அதே சமயத்தில், எந்தவொரு இந்திய குடிமகனும் தான் விரும்பிய மதத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அதை பரப்புவதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. கல்வியறிவு மேம்பாடு மற்றும் வறுமை ஒழிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் அரசுகளுடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் தேசம் சந்தித்து வரும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் ஃபாஸிசம் சம்பந்தமான பாப்புலர் ஃப்ரண்ட்டின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். இதன் காரணத்தினால்தான் இந்த இயக்கம் மத்திய அரசால் குறிவைக்கப்பட்டு வருகின்றது, இதுபோன்ற முயற்சிகளை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வது என இயக்கம் தீர்மானித்துள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் கேரள மாநில தலைவர் நஸ்ருதீனும் பங்குபெற்றார்.

இப்படிக்கு,

E.அபுபக்கர், 
தேசிய தலைவர், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *