Breaking News

மாணவர்களிடம் உயர்ந்த பண்புகளை உருவாக்கும் சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக பிரிவினைவாதி ஹெச்.ராஜாவை தேர்தெடுக்க கூடாது. – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

படிக்கும் மாணவர்களிடத்தில் நாட்டுப்பற்றையும், நல்லொழுக்கத்தையும், உயர்ந்த பண்புகளையும் உருவாக்குவதற்காக செயல்பட்டுவரும் சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழக தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், ஒற்றுமையாக வாழும் மக்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்திலும், தேசவிரோத மதவாத கருத்துக்களை தொடர்ந்து பேசிவரும் பா.ஜ.க வை சேர்ந்த ஹெச்.ராஜாவை வெற்றிபெற செய்வதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்ற செய்தி கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதவாத பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நமது தேசம் சொல்லெணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றது.

மாட்டின் பெயரால் மனிதனை கொல்வது, கறுப்பு பண ஒழிப்பு என்று கூறி கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவது, ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவருவது. நீட் தேர்வின் மூலம் சமூக நீதியை குழிதோண்டி புதைத்தது, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்க முயற்சிப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் வரிசையில் கல்வித்துறையிலும் தங்களுடைய பிரிவினைவாத பாசிஸ கருத்துக்களை புகுத்தும் முயற்சியில் தேசம் முழுவதும் பா.ஜ.க ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதிதான் வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஹெச்.ராஜா போன்ற பிரிவினை வாதிகளை கல்வித்துறையில் செயல்பட செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நிலவும் அதிகாரப் போட்டியை பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு பின்வாசல் வழியாக அதிகாரமிக்க பதவிகளில் தங்களுடைய நபர்களை அமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக ஹெச்.ராஜாவை அமர்த்துவதற்கான  முயற்சியாகும்.

இவரை  போன்றவர்கள் மாணவர்களை வழிநடத்துவார்களேயானால் மாணவர்களிடத்தில் பிரிவினைவாத, நச்சுக் கருத்துக்கள் நிச்சயம் விதைக்கப்படும். ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்து ஒட்டுமொத்த தமிழகமும் போராடிய போது கோவையில் முஸ்லிம் மாணவன் இந்து மாணவனை தாக்கி விட்டான் என பொய்யான தகவலை டிவிட்டரில் பதிவு செய்தது போன்ற எண்ணற்ற பிரிவினை வாத பொய்யான தகவல்களை பரப்பும் பிரிவினைவாதிதான் ஹெச்.ராஜா என்பதை தமிழக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இவர் போன்ற நபர்களை தேர்ந்தெடுத்தால் சகோதரத்துவ வாஞ்சையோடு வாழும் தமிழக மாணவர்களிடத்தில் பிரிவினைத் 'தீ' நிச்சயம் மூட்டப்படும். நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவேன் என்று ஒவ்வொரு நாளும் உறுதிமொழி எடுக்கும் மாணவர்களை, ஒருமைப்பாட்டை சீர்குலைப்பேன் என உறுதிமொழி எடுக்க வைத்து விடுவார்.

எனவே தமிழக அரசு பிரிவினைவாதி ஹெச்.ராஜாவை சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக கொண்டுவரும் முயற்சியை கைவிடவேண்டும். இந்த தேர்தலில் வாக்களிக்க கூடிய முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் பிரிவினைவாத பா.ஜ.க வை சேர்ந்த ஹெச்.ராஜாவை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                          
இப்படிக்கு
 
A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *