Breaking News

என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு அமைப்பு – NIA) அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது! பி.ஜே.பி.யின் அரசியல் ஆயுதமாக அது செயல்படுகின்றது! – பாப்புலர் ஃப்ரண்ட்.

புது தில்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) செயல்பாடுகளும் தலையீடுகளும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கடுமையான பாரபட்சத்தோடு செயல்பட்டு வருவதையே காட்டுகின்றது. மேலும், தேசம் மற்றும் தேசத்தின் மக்களுடைய நலனுக்காக செயல்படாமல் சங்க பரிவாருடைய செயல்திட்டத்தை பகிரங்கமாக ஊக்குவித்து வருகின்றது என்று கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
அரசியலமைப்பு விழுமியங்களை சற்றும் பொருட்படுத்தாமலும் மதிக்காமலும் நம்பத்தகுந்த புலனாய்வு நிறுவனமான NIA மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சனைகளில் மட்டுமே NIA தலையிட்டு வருகின்றது.
 
ஒருபுறம், மாலேகான் மற்றும் சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஈடுபட்ட ஹிந்துத்துவ குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு திட்டமிட்டு உதவி வருகின்றது. மறுபுறம் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான தீவிரவாத வழக்குகளை ஜோடிப்பதில் அது முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
 
ஹிந்துத்துவ நபர்கள் குற்றம்சாட்டப்பட்ட தீவிரவாத வழக்குகளை NIA கையாளுவது சர்ச்சைகளை உருவாக்கி இருக்கின்றன. டஜன் கணக்கான அப்பாவி குடிமக்களை படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளிவர இந்த அமைப்புகள் உதவுவதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. மாலேகான் வழக்கில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டி, 2015ல் NIA தன்னை அணுகியதை குறித்து மூத்த அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர்,  அவர் ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அந்த பொறுப்பிலிருந்து மறைமுகமாக நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு 9 வருடங்களாகியும் NIA குற்றப்பத்திரிகை தயார் செய்யாததால் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் ஸ்ரீ காந்த் புரோஹித் சமீபத்தில் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கின் தலையெழுத்தும் இதே திசையில் தான் செல்லும் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் தடை செய்யப்படுவதற்கும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்களை பயங்கரவாதியாக தவறாக சித்தரித்ததிலும்  என்.ஐ.ஏ.வின் சந்தேகத்திற்குரிய அறிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பாவித்து தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி முஸ்லிம் தலைவர்களையும், இயக்கங்களையும் நிறுவனங்களையும் குறிவைத்து வேட்டை ஆடுவதையே குறிக்கோளாக கொண்டு NIA  செயல்படுவது இன்னும் தொடர்கின்றது.
 
தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பான வழக்கமான நடைமுறையில் ஒன்றாக இருந்தபோதிலும் தான் விரும்பிய மதத்தை  தேர்ந்தெடுத்த ஹாதியா என்ற பெண்ணின் வழக்கில் என்.ஐ.ஏ. வேண்டுமென்றே மூக்கை நுழைத்து விசாரணையை பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்துவது விசித்திரமாக உள்ளது. 24 வயது கொண்ட ஒரு பெண்ணுடைய திருமணத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்ததாக நீதித்துறை வரலாற்றில் எங்கும் கேள்விப்பட்டதே கிடையாது.
 
இத்தகைய ஒழுக்கச் சீர்கேடு மற்றும் நெறிமுறையற்ற அரசு நிறுவனத்துடைய  அதிகாரிகளால், ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அது அழித்துவிடும் என்று இந்த கூட்டம் நினைவுப்படுத்தியுள்ளது.
 
தேசிய புலனாய்வு அமைப்பை அரசியல் ஆயுதமாக தவறுதலாக பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். மேலும் இத்தகைய கடுமையான அத்துமீறல்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகளும், மக்கள் இயக்கங்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்த கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இப்படிக்கு
 
M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புது தில்லி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *