Breaking News

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தேவை! – சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கோரிக்கை!

பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (19.08.17 – சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர்  M.முஹம்மது இஸ்மாயில் அவர்களும், மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது அவர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.முஹம்மது பயாஸ் அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது ரசின் அவர்களும் முன்னிலை வகித்தனர். கடந்த 6 மாதத்தின் இயக்க செயல்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டு, இந்நிகழ்ச்சியின் இறுதியில் பின்வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு துவங்கி, தொடர்ந்து மதியம்  1:30 மணிக்கு  பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி யானை கல் மண்டபம் அருகில் உள்ள பாப்புலர் ஃ ப்ரண்டின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரிவினைவாதிகளை தமிழக அரசு  இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

அமைதி பூங்காவான தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் இந்து முன்னணி மற்றும் சங்க பரிவார அமைப்புகள், எதிர் வரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத் பெருநாள் பண்டிகைகளை முன்னிறுத்தி இரு சமூகங்களுக்கு இடையில் வகுப்புவாத  பிரிவினை பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. பண்டிகைகள்  கொண்டாடப்படவேண்டியதே தவிர சமூக அமைதியை சீர்குலைத்து வெறுப்பை விதைக்க கூடாது. ஆனால், இந்து முன்னணி மற்றும் சங்க பரிவார அமைப்புகள் சார்பாக நடத்தப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் மட்டும் வெறுப்பையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருவதை தமிழக அரசும், காவல் துறையும்  கவனத்தில் கொண்டு வன்முறையை தூண்டுவோர் மீது கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து அமைதியை நிலை நிறுத்திட  வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

வஃக்ப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படவேண்டும்!

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்காக முன்னோர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் தான் வஃக்ப் சொத்து. இந்த நிலங்களை பயன்படுத்தும் விதத்தில் இல்லாமல் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளதால், நோக்கம் நிறைவேறாமல் சமூகத்தின் அவலநிலை நீடிக்கிறது. வஃக்ப் வாரியத்தை சீர் செய்வதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோபால் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியரும் நேரடியாக கவனத்தில் கொண்டு வஃக்ப் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வழிப்பறி செய்யும் வழிப்பறி கும்பல் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பசு பாது காவலர்கள் என்ற பெயரில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் மிரட்டி பணம் பறிப்பதும் முஸ்லிம்களின் மத கடமையான குர்பானி கடமையை தடுத்திடும் விதத்திலும் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மாடுகளை சந்தையில் விற்பது மற்றும் மாடுகளை அறுப்பது தொடர்பாக ஜூன் மாதம் மத்திய அரசு விதித்து  இருந்த தடைகளை நீக்கி உத்தரவிட்ட பின்பும் இது போன்று மிரட்டும் நிகழ்வுகள் தொடர்வது மிகவும் ஆபத்தானது. தமிழக அரசு இது விசயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி முஸ்லிம்களின் மத கடமையான குர்பானி மற்றும் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தேவை!

மத்திய அரசின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க நீங்கலாக தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராடியதை தொடர்ந்து தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒரு வருடம் விலக்கு அளித்துள்ளது, இந்த ஒரு வருட விலக்கு  என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே. எனவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு  நிரந்தர விலக்கு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை பாப்புலர் ஃப்ரன்ட் சார்பாக முன்வைக்கின்றோம்.  

 

Press Meet , Get together @ Salem (3) Press Meet , Get together @ Salem (1)Press Meet , Get together @ Salem (1) Press Meet , Get together @ Salem (2)

 
இப்படிக்கு
 
M.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *