Breaking News

பாபர் மசூதி விவகாரம் மீதான ஷியா வக்ஃப் வாரியத்தின் அஃபிடவிட் ஏமாற்றம் அளிக்கிறது : பாப்புலர் ஃப்ரண்ட்

புது தில்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவிலை கட்டுவதற்கு உத்திர பிரதேச ஷியா வக்ஃப் வாரியம் அஃபிடவிட் தாக்கல் செய்தது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம் சமூகத்திலுள்ள சில கைக்கூலிகளுக்கு அழுத்தம் கொடுத்து பாபர் மசூதியுடைய வழக்கையும் நீதிக்கான போராட்டத்தையும் நீர்த்துப்போக செய்வதற்கு சங்கபரிவார் முயலுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. உ.பி ஷியா வக்ஃப் வாரியத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் சில தனி நபர்கள், ஆளும் பாஜக அரசுடைய ஆதரவை பெறுவதற்காக அஃபிடவிட் தாக்கல் செய்ய முன்வந்துள்ளனர். இதற்கு முன்னதாகவே, ராம ஜென்மபூமியின் பெயரால் வெறுப்பு பிரச்சாரத்தை பாஜக துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலருடைய தனிப்பட்ட அற்ப இலாபத்திற்காக கடந்த சில தசாப்தங்களாக நீண்ட நெடிய நீதிக்கான போராட்டத்தை நடத்தி வரும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு, உ.பி ஷியா வக்ஃப் வாரியம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இந்த அஃபிடவிட் மூலம், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ல் இடித்து, மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவுடைய முகத்தில் நிரந்தரமான வடுவை ஏற்படுத்தியவர்களின் பக்கம் இருப்பதையே அந்த வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. தங்களது நாணயத்தை விற்ற இத்தகைய நபர்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் எந்த ஆதரவும் இருக்காது. அது சுன்னி, ஷியா அல்லது மற்ற பிரிவாக இருந்தாலும் சரியே.
 
அதே சமயம், இந்த வழக்கில் அந்த வாரியத்திற்கு எந்த பங்கும் இல்லாததால், அந்த வாரியத்துடைய அஃபிடவிட்டால் இந்த வழக்கிற்கு சட்ட ரீதியான எந்த முக்கியத்துவமும் கிடையாது. நடைபெற்று வரும் ஹிந்துத்துவ பிரச்சாரத்தை மட்டுமே இது திருப்திபடுத்தும் என்பது சுப்ரமணிய சாமியின் அறிவிப்பிலிருந்து தெளிவாக தெரிகிறது.
 
சுப்ரமணிய சாமியின் கருத்துக்கு பதில் தெரிவித்த தேசிய தலைவர், “சாமி நம்புவது போன்று இது ஒன்றும் கடவுள் வழங்கிய தீர்வு கிடையாது. மாறாக, இது சாத்தான் செய்த சதியாகும்". மேலும், பாபர் மசூதிக்கு நீதி கிடைக்கும் வரை எந்த சூழலிலும் இந்திய முஸ்லிம்கள் தனது சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவார்கள்.” என்று கூறியுள்ளார்.
 
இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *