Breaking News

அறிவு மற்றும் தைரியம் கொண்டு தடைகளை முறியடித்து நீதிக்காக நிற்போம் : மௌலானா கலிலுர் ரஹ்மான் சஜ்ஜாத் நுஃமானி.

புது தில்லியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்தில் நடைபெற்று வரும் மாதாந்திர விரிவுரை நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பணிக்குழு உறுப்பினரும் புகழ்பெற்ற அறிஞருமான மௌலானா கலிலுர் ரஹ்மான் சஜ்ஜாத் நுஃமானி, “நமது நாட்டில், பயம் மற்றும் பாதுகாப்பின்மை நிலவும் தற்போதைய சூழலில், முஸ்லிம் சமூகம் அறிவையும் தைரியத்தையும் வெளிப்படுத்தி அவர்களை சூழ்ந்துள்ள தடைகளை முறியடிக்க முன் வர வேண்டும்.” என்று அழைப்பு விடுத்துள்ளார். ‘இஸ்லாமிய பார்வையில் மனித உரிமை மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
“இன்று நாம் தொழுகை மற்றும் நோன்பு போன்ற இபாதத்துகளோடு மார்க்கத்தை சுருக்கி விட்டோம், ஆனால் அது மட்டுமே முஸ்லிம் என்ற  நம்முடைய பொறுப்பை நிறைவு செய்ததாக ஆக முடியாது. சமூகத்துடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்  முயற்சிகளை எடுப்பதும் நமது கடமைகளில் ஒன்றாகும். மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து படைத்தவனுடைய அடிமையாக மாற்றுவதில் மக்களை வழிநடத்துவதும் நமது பொறுப்பாகும்” என்று கூறியுள்ள மௌலானா, “இறைக் கோட்பாடுகள் அடிப்படையில் நமது வாழ்க்கை முறையையும், பண்புகளையும் மாற்றியமைக்க வேண்டும், அப்பொழுது தான் மக்கள் நம்முடைய நடத்தையை பார்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்வார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மக்களோடு நாம் இருக்க வேண்டிய நேரம் இது. மத  மற்றும் கார்ப்பரேட் ஃபாஸிசமான சமூக தீமைகளுக்கு எதிராக போராட இன்று நாம் தயாராகவில்லை என்றால்; இன்றைய காலத்தின் முழுமையான பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருக்கும் வேறொரு கூட்டத்தை கொண்டு அல்லாஹ் நம்மை மாற்றிவிடுவான்.  அதேபோன்று,  நாம் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கோ அல்லது அதிகபட்ச எதிர்வினை செய்யக் கூடியவராகவோ ஆகி விடக் கூடாது. மாறாக, இன்றைய முஸ்லிம்கள் அறிவு மற்றும் தைரியம் என்ற இரண்டு திறமைகளையும் கூட்டாக பழக வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

ஏற்றத் தாழ்வுகளை ஊக்குவிக்கின்ற அப்பட்டமான முதலாளித்துவ கொள்கையை விமர்சித்துள்ள மௌலானா “சிறிய பொருட்களை வாங்கவும் நாம் சம்பாதித்த அதிகமான பணத்தை வரியாக கொடுக்க வேண்டியுள்ளது மேலும் அந்த பணமும் இறுதியில் கார்ப்பரேட்களை அழகுபடுத்துவதாக இருக்கிறது. நமது உடலில் ஏதேனும் ஒரு உடல் உறுப்பு மென்மேலும் வீங்கி கொண்டு சென்றால் அது நம்முடைய உடலுடைய ஆரோக்கியத்தின் அறிகுறி கிடையாது மாறாக அது நோய் இருப்பதற்கான அறிகுறியாகும். இதேபோன்று, சீரற்ற மற்றும் நெறிமுறையற்ற வளர்ச்சி மாதிரியின் காரணமாக நமது நாட்டில், பணக்காரன் பணக்காரனாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் : “தேசத்துடைய வளத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சிறுபான்மை பணக்கார கார்ப்பரேட்களுக்கு சேவை செய்து வரும் அரசு; தேசத்தில் வாழும் பெருன்பான்மை மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தை மறுத்து வருகிறது. இது போன்ற உண்மைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, பசு பாதுகாப்பு மற்றும் கருப்பு பணத்தை பிடிப்பது போன்ற பிரச்சனைகளை அரசு வேண்டுமென்றே உருவாக்கி மக்களை அந்த பிரச்சனைகளில் ஈடுபடுத்தி வருகின்றது.” என்றும் கூறினார். 
 
இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட்ன் தேசிய செயற்குழு உறுப்பினர் E.M அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். விரிவுரையை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது முடித்து வைத்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷாஃபி விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் தில்லி மாநில தலைவர் பர்வேஸ் அஹமது வாழ்த்துரையும், பாப்புலர் ஃப்ரண்ட் தில்லி மாநில செயலாளர் குல்ஃபாம் ஹுசைன் நன்றியுரையும் ஆற்றினர்.

Moulana Khalilur Rahman Sajjad Nomani Public
                                                                                       
இப்படிக்கு
 
ஷஃபீகுர்  ரஹ்மான், 
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *