Breaking News

உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ரேசன் முறையை ஒழித்து மக்கள் நலனை கார்பரேட்களிடம் அடகு வைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பொருட்கள் விநியோக திட்ட பயனாளிக்களுக்கான விதிமுறைகளை தமிழக அரசு தன்னுடைய அரசிதழில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வருடம் 1 இலட்சம் வருமானம் பெரும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்கள், குளிர் சாதன கருவி வைத்துள்ள குடும்பங்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளை கொண்ட வீட்டை கொண்ட குடும்பங்கள், ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட ஒன்பத்துக்கும் மேற்பட்ட வகையினருக்கு ரேசன் பொருள்கள் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நடைமுறை சாத்தியமில்லாத, சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்க கூடிய, நடைமுறைகளை விதிகளாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மூலம் தேசமக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, GST வரி விதிப்பு போன்ற நடவடிக்கை மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாநிலத்திற்கு கொடுத்துவந்த அத்தியாவசிய பொருள்களுக்கான மானியத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை நாட்டின் வளர்ச்சி கருதி வசதியுள்ளவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு செய்தார். மற்றவர்களுக்கு மானியம் தொடரும் எனவும் அறிவித்தார். தற்போது கார்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் வகையில் எதிர்வரும் 2018 மார்ச் மாதத்தோடு கேஸ் சிலின்டர்களுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இதே அணுகுமுறையை பின்பற்றி மத்திய பா.ஜ.க அரசின்  எடுபிடியாக செயல்பட்டு வரும் தமிழக அரசு ரேசன் பொருளை யாரும் வாங்க முடியாதபடியான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டு விட்டு மக்களை திசை திருப்பும் விதத்தில் இது தமிழகத்திற்கு பொருந்தாது என்ற அறிக்கையையும் உணவுத்துறை அமைச்சரை வைத்தும் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் மக்களை முட்டாள்களாக்கும் செயல்பாடாகும். தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ரேசன் கடைகளை முற்றிலும் இல்லாமலாக்கி அம்பானி, அதானி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மக்கள் விரோத மத்திய அரசின் செயல்திட்ட பாதையில் தமிழக அரசு செல்ல துவங்கியுள்ளதையே இந்த அறிவிப்பு நமக்கு காட்டுகின்றது.

மக்கள் விரோத மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு தமிழக அரசு செயல்படுவதை உடனே நிறுத்த வேண்டும், ரேசன் முறையை தகர்க்கும் விதத்தில் அரசிதழில் வெளியிடப்பட்ட பொருள்கள் விநியோக திட்ட பயனாளிகளுக்கான விதிமுறைகளை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம். இது போன்ற மக்கள் விரோத செயல்திட்டங்களுக்கு எதிராக போராட முன் வர வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                       
இப்படிக்கு
 
M. முஹம்மது இஸ்மாயில், 
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *