Breaking News

வந்தே மாதரம் பாடலை பாட கட்டாயப்படுத்துவது ஒருக்காலும் ஏற்புடையதல்ல! இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும்! – சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட்.

இந்த தேசத்தின் சுதந்திர எழுச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத, வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்திற்கு எதிராக உள்ள, முஸ்லிம்கள் உட்பட பல சமூகத்தின் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட, வந்தே மாதரம் பாடலை பாட கட்டாயப்படுத்துவது என்பதை ஒருக்காலும் ஏற்க முடியாது, தேசப்பற்றாளர்கள் ஏற்க மாட்டார்கள். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 
ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தே மாதரம் பாடல் குறித்த கேள்விக்கு சரியாக விடையளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என வீரமணி என்பவர் தாக்கல் செய்த மனுவிற்கு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.பி.முரளிதரன் அவர்கள் இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடல் வாரம் ஒருமுறை கட்டாயமாக பாடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தேசத்தை வடிவமைத்த நமது முன்னோர்கள் இந்த தேசத்தின் தன்மை, மக்களின் குணநலன், பலசமயம், பல கலாச்சாரம், பலவிதமான இறை நம்பிக்கை போன்றவற்றை மனதில் வைத்து எந்த சூழலிலும் நாட்டு மக்களிடையே பிரிவினை வந்து விடக் கூடாது, வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது தேசத்தின் பலம் என்ற உன்னதமான நிலைப்பாட்டோடு ஒவ்வொரு விசயங்களையும் முடிவு செய்து நடைமுறைப்படுத்தினர். தேசிய கீதம் குறித்து 1937 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் நடந்த விவாதத்தில் வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக அறிவிக்க முடியாது என தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பின் ரவீந்தர நாத் தாகூர் எழுதிய மதங்களுக்கு அப்பாற்பட்ட,இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனகனமன பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.
 
வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் அஸ்வின் உபாத்யா சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 51 A அடிப்படை கடைமைகள் குறித்து கூறுகையில் தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் பற்றி மட்டுமே பேசுகின்றது. தேசிய பாடல் குறித்து எந்த இடத்திலும் அரசியல் சாசன சட்டம் பேசவில்லை. எனவே வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக கூற முடியாது,பாடுவதும் கட்டாயமில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் தாண்டி சுதந்திர போராட்ட காலத்தில் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த பாடல் பாடப்படவில்லை, மாறாக ஆங்கிலேயருக்கு எதிராக களத்தில் உறுதியாக போராடிய முஸ்லிம்களை கொன்று குவிப்பதற்காக இந்த பாடல் பாடப்பட்டுள்ளது என்பதே பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. இப்பாடலை எழுதிய பக்கிம் சந்தர் சட்டர்ஜி சாவர்க்கரை போல் ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்தவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
 
நிலைமை இவ்வாறிருக்க தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உச்ச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றமாக தீர்ப்பு வழங்கியுள்ளார். மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்,ஒரே கல்வி முறை,ஒரே சிவில் சட்டம் போன்ற தேசத்திற்கு ஒத்து வராத தேசத்தின் அடிப்படை தத்துவத்திற்கு எதிரான, மக்களை பிளவுபடுத்தும் செயல்திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது. இதனுடைய பிரதிபலிப்புதான் நீதிபதி எம்.பி.முரளிதரன் அவர்களின் தீர்ப்பு.
 
இந்த தேசத்தின் சுதந்திர எழுச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ,வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்திற்கு எதிராக உள்ள, முஸ்லிம்கள் உட்பட பல சமூகத்தின் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை கொண்ட, உச்ச நீதிமன்றம் இந்த பாடல் குறித்து வழங்கிய தீர்ப்புக்கு மாற்றமாக வந்தே மாதரம் பாடலை பாட கட்டாயப்படுத்துவது என்பதை ஒருக்காலும் ஏற்க முடியாது, தேசப்பற்றாளர்கள் ஏற்க மாட்டார்கள். இது நமது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு. சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
 
                                                                                      
இப்படிக்கு
 
A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *