Breaking News

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியின் கைது! – பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது. மனித உரிமை ஆர்வலர் மற்றும் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி அவர்கள் தொடர்ந்து மக்கள் பிரச்சினையை எழுப்பி வருபவர். 2009-ம் ஆண்டு தலித் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததை கண்டித்தும், மாணவர் விடுதியின் தரத்தை உயர்த்தக் கோரியும் அப்போது போராட்டம் நடத்தினார். அந்த வழக்கை காரணம் காட்டி (ஜுலை 25, 2017) அன்று காவல்துறை அவரை கைது செய்தது உள்நோக்கம் கொண்டது. அவர் இயற்றிய கக்கூஸ் என்ற ஆவணப் படம் கையால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையையும் அரசாங்கத்தின் மெத்தன போக்கையும் எடுத்து சொல்லும் படம். இந்த ஆவணப்படத்தை தமிழக அரசு வெளியிட தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தமிழக அரசு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வதும்  பின்னர் அவர்கள் மீது  குண்டர் சட்டம் போன்ற சட்டங்களை பிரயோகித்து அச்சுறுத்தியும் அவர்களை முடக்க நினைக்கின்றது.  மீத்தேன் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என்று போராடி வந்த களப்பணியாளர் வளர்மதியை  இப்படி சமீபத்தில் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் குண்டர் சட்டத்தையும் அவர் மீது பாய்ச்சியுள்ளது. அவர் துண்டு பிரசுரம் விநியோகித்தது தான் அதற்கு காரணமாம். அதே போல் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தோழர் திரு முருகன் காந்தி அவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை மறக்க முடியாது. கதிராமங்கலத்தில் ஓ.ஏன்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் மீது 12 வழக்குகள் போட்டு சிறையில் அடைத்துள்ளது. இத்தகைய கைதுகள் அனைத்தையும் மத்திய பாஜக அரசை திருப்திபடுத்தவே அதிமுக அரசு செய்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை வழக்கு போட்டும், கைது செய்தும் ஒடுக்க நினைக்கின்ற மாநில அரசின் செயல்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கின்றது. எஜமானிய சிந்தனையோடு செயல்படும் தமிழக அரசு இத்தகைய ஜனநாயக விரோத கைதுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் மீது போடப்பட்டுள்ள அத்தனை வழக்குக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.
 
இப்படிக்கு
 
எம்.முஹம்மது இஸ்மாயில்
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *