Breaking News

அடித்து படுகொலை செய்யும் குண்டர்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் : 43 உறுப்பினர்கள் கைது! – சிறையில் உள்ளவர்கள் மற்றும் பாகூரில் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்தினர்களுடன் வழக்கறிஞர்களின் குழு சந்திப்பு!

ஜார்கண்ட், பாகூரில் பசு பாதுகாவலர்கள் என்றழைக்கப்படும் பசு குண்டர்களால் முஸ்லிம்கள் அடித்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த உள்ளூர் பாஜக தலைவர் ஹிஸாபி ராய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், பாகூரில் அமைதியான முறையில் ஜனநாயக அடிப்படையிலான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுடைய குடும்பத்தினர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடைய தேசிய பிரதிநிதிகள் குழு 17.07.17 அன்று சந்தித்தது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுஃப், மாவட்ட தலைவர் உபைதுர் ரஹ்மான், நகர மற்றும் யூனிட் தலைவர்கள் ஆகியோர் இருந்தனர்.

Jharkhand Visit (2) Jharkhand Visit (1)
 
மண்டல தலைவர் மௌலானா கலீமுல்லாஹ் மற்றும் மண்டல செயலாளர் ஹனீஃப் ஆகியோருடன் சேர்ந்து பிரதிநிதிகள் குழு 25 குடும்பத்தினர்களை கடந்த ஞாயிற்றுகிழமை16.07.17 அன்று சந்தித்தனர்.  ஜார்கண்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக  பசு குண்டர்களால் முஸ்லிம்கள் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு வருகிறது. லதிஹர் பகுதியில் எருமைமாடு வியாபாரிகளான இரண்டு முஸ்லிம்கள் அடித்து படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தாக்கல் செய்த பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது.

ஜம்தரா காவல் துறைக்கு எதிரான ரிட் மனு!

தேசிய அளவிலான பள்ளி செல்வோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்கண்டில் பல்வேறு பகுதிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜம்தரா மாவட்டத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட பொழுது  நரேன்பூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து மைக் செட்டை கைப்பற்றினார். உடனடியாக இயக்க உறுப்பினர்கள் காவல் நிலையம் விரைந்த பொழுது, ”பாப்புலர் ஃப்ரண்ட் பேனரை அகற்றினால் பள்ளி செல்வோம் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரப்படும்” என்று  காவல்துறை ஆய்வாளர் கூறியுள்ளார். நமது தலைவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து நிகழ்ச்சி தொடங்கிய போது, காவல்துறையினர் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி நமது தலைவர்களையும் கைது செய்தனர். அவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக, நமது ஜம்தரா மாவட்ட தலைவர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
ஜாம்ஷெட்பூரில் (சாராய்கேலா) சட்ட உதவிகள்!

ஜாம்ஷெட்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாராய்கேலா மாவட்டத்தில், ரமலான் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு, பசு குண்டர்களுடைய பொய்யான குற்றச்சாட்டால் நான்கு முஸ்லிம் மாடு வியாபாரிகள் அடித்து கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், NCHRO மற்றும் பந்தி முக்தி கமிட்டியுடைய கூட்டு உண்மை கண்டறியும் குழுவில் பாப்புலர் ஃப்ரண்ட் பாகூர் மாவட்ட செயலாளர் அப்துல் ஹன்னான் பங்கு பெற்றார். இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அந்த கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்தினர்கள் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய, நாம் சட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஹிஸாபி ராயின் வெறுப்பு செய்தி மற்றும் பாகூர் ஆர்ப்பாட்டம்!

ரமலானுடைய இறுதி நாட்களில் ஹரியானாவில் ஜுனைத் அடித்து படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் அலிமுத்தீன் அடித்து படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஜார்கண்ட் மாநிலம் கிரிட்டியில் உஸ்மான் கொடூரமாக தாக்கப்பட்டதுடன் அவருடைய வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.  இந்த சம்பவங்களுக்குப் பிறகு, பாஜக உள்ளூர் தலைவர் ஹிஸாபி ராய், “ராம்கர் மற்றும் கிரிடியில் என்ன நடந்ததோ, அது மீண்டும் பாகூரில் நடைபெறும். புதிய காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் காவலாளிகள் எங்களுடைய ஆட்கள். காவல்துறையின் உதவியோடு முஸ்லிம்களை நாங்கள் அடக்கி விடுவோம்” என்ற செய்தியை வாட்ஸ் அப்பில் பரப்பினார். இதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல் ஹன்னான் ஜூலை 30 ஆம் தேதி பாகூர் நகர காவல் நிலையத்தில் குற்றவியல் புகாரைத் தாக்கல் செய்தார். காவல்துறை  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் ஹிஸாபி ராய் கைது செய்யப்படவுமில்லை விசாரணை செய்யப்படவுமில்லை. அடித்து படுகொலை செய்த கும்பலுக்கு எதிராகவும் வெறுப்பு செய்தி பரப்பியவரை கைது செய்ய கோரியும் பாகூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக  05 ஜூலை 2017 அன்று காந்தி சௌக் தொடங்கி நகர காவல் நிலையம் வரை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்து லத்தி சார்ஜ் செய்து 65 நபர்களை கைது செய்தனர், அவர்களுள் பெரும்பாலானோர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் மௌலானா ஹன்ஜலா ஷேக் , மாநில பொதுச்செயலாளர் அப்துல் வதூத் மற்றும் சில மாநிலக் குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். 30 மணிநேர சட்டவிரோத காவல் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிறகு 43 உறுப்பினர்களும் தலைவர்களும் பாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 22 உறுப்பினர்கள் மீது  Cr.P.C. 107 கீழ் சிறு குற்ற வழக்கு பதிவு செய்த பிறகு விடுதலை செய்தனர். தில்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, புனே மற்றும் ராஞ்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் குழு பாகூரில் முகாமிட்டு கைது செய்யப்பட்ட நபர்களை ஜாமீனில் எடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இப்படிக்கு 

ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *