Breaking News

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக கூட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சமீபத்தில் விதித்த தடை உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அறிவித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ளது. நிச்சயமாக இந்த உத்தரவு கால்நடை மற்றும் மாட்டிறைச்சி வணிகம் சார்ந்து வாழக்கூடிய இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கிடைத்த மகத்தான நிவாரணமாகும். பசு பாதுகாப்பு என்ற பெயரால் மதவாத கலவரங்களை தூண்டிவிடும் நபர்களுக்கும்; அடித்து படுகொலை செய்யும் கும்பல்களுக்கும் உச்ச நீதிமன்றத்துடைய இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாகும். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களில் பசு பாதுகவலர்களால் டஜன் கணக்கில் மக்கள்  அடித்துக் கொல்லப்பட்ட கொடூரங்களை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
 
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

அமர்நாத்திலிருந்து திரும்பிய யாத்ரீகர்கள் மீது நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலை தேசிய செயலகக் கூட்டம் வன்மையாக கண்டித்துள்ளது. சூழ்நிலை எவ்வாறாக இருந்தாலும் எந்தவொரு குழுவோ அல்லது சக்தியோ அப்பாவி மக்கள் மீது கை வைப்பதை நியாயப்படுத்தவே முடியாது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் உட்பட இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் தப்பித்து விட ஒரு பொழுதும் அனுமதிக்கக்கூடாது. அதே நேரத்தில் பிரிவினைவாத சிந்தனை முகாம்களை சார்ந்தவர்கள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி காஷ்மீர் மக்கள் மீது தனது வெறுப்பையும் அராஜகத்தையும்  கட்டவிழ்த்துவிட அதிகாரிகள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. இந்த தாக்குதல் அமர்நாத் யாத்ரீகர்களை குறி வைத்து நடத்தப்படவில்லை மாறாக போராளிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது யாத்ரீகர்களுடைய பேருந்து சிக்கிக்கொண்டது என பத்திரிகையில் வரும் செய்திகளுடைய உண்மை தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் இந்த வழக்கை எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து ஒரு ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய செயலக கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இப்படிக்கு
 
M முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *