Breaking News

மாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறை மற்றும் வழிப்பறி கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலகக் கூட்டம் அரசுக்கு வலியுறுத்தல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் 03/07/2017 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, மாநில துணைத் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்ற அக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு  பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
தீர்மானம் 1 : மாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறை மற்றும் வழிப்பறி கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்!
 

மாட்டிறைச்சியோடு அல்லது வேறு காரணங்களோடு தொடர்புபடுத்தி  என்ன நடந்தது என்று கூட பாராமல்  ஓரு முஸ்லிம் அல்லது தலித் எந்நேரமும் அடித்து கொலை செய்யப்படலாம் என்ற ஒரு அவலமான நிலை  இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. மத்தியில் பி ஜே பி ஆட்சிக்கு  வந்த பிறகு நடத்தப்பட்ட இது போன்ற தாக்குதல்களில் இதுவரை 24 முஸ்லிம்களும் மற்ற சமூகத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற வன்முறையை நடத்தியே தீருவோம் என்று இந்து முன்னணி மற்றும் பாசிச சங்க பரிவார கும்பல்கள் வெறிக்கூச்சலிட்டு வருகின்றனர்.
 
அதன் ஓரு  பகுதியாக விவசாயத்திற்காகவும் இன்ன பிற  தேவைகளுக்காகவும் சந்தையில் மாடுகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்துவது அவர்களிடம்  பேரம் பேசி பணம் பறிப்பது போன்ற வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சமீபத்தில்  பழநியில் இதுபோன்றதொரு சம்பவம்  நடைபெற்றது. பொது மக்களின் முயற்சியினால் காவி வன்முறை கும்பலின்  சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் பழநியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது இந்து முன்னணி, சிவசேனா குண்டர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அதேபோன்று தாராபுரம், சத்தியமங்கலம், திருவள்ளூர் போன்ற பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை மறித்து பணம் பறிக்கும் இந்து முன்னணி மற்றும் சங்க பரிவார  குண்டர்களின்  வழிப்பறி கொள்ளையை  தமிழக அரசு உடனடியாக  தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள் தாங்களே களத்தில் இறங்கி இந்த வன்முறை மற்றும் வழிப்பறி கும்பலை எதிர் கொண்டிட வேண்டும் என அழைப்பு விடுப்பதுடன் பாப்புலர் ஃப்ரண்ட் அவர்களுடன் களத்தில் நிற்கும் எனவும் தெரியப்படுத்திக்கொள்கின்றது. மேலும், தமிழகத்தில் இந்த பாசிச வன்முறையாளர்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
 
தீர்மானம் 2 :  கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜீ.சி என்ற எண்ணை நிறுவனத்தால் எண்ணை குழாய்கள் பதிப்பதை உடனே கைவிட வேண்டும்! 
 
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் கதிராமங்கலம் என்ற கிராமத்தில் ஏற்கனவே ஓ.என்.ஜீ.சி என்ற எண்ணை நிறுவனத்தால் பதிக்கப்பட்ட எண்ணை குழாய்களில் சில தினங்களுக்கு முன் கசிவு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த எண்ணை குழாய்களை பழுதுபார்த்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஓ.என்.ஜீ.சி எண்ணை நிறுவனம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு கதிராமங்கலம் மற்றும் சுற்றுவட்ட கிராம மக்கள் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மாநில அரசு காவல்துறையை வைத்து தடியடி நடத்தியது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது.
 
மண்ணையும் விவசாயத்தையும் பாதிக்கக் கூடிய இத்தகைய திட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை என்ற அம்மக்களின் கோரிக்கை நியாயமானதே. மக்களுக்காக தான் திட்டங்களே தவிர மக்களை அழிக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு தேவையில்லை என்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் முழுமையாக நம்புகின்றது,அதனையே வலியுறுத்தவும் செய்கின்றது. தமிழகத்தில் விவசாயம் பொய்த்து வறட்சி மாநிலமாக காட்சியளிக்கின்றது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள இச்சூழலில் விவசாய  பூமியை அழிக்கும் இத்திட்டத்தை மேற்கொள்வது சரியான செயல்பாடாக கருதமுடியாது. இதனை மாநில அரசு உடனே கைவிட வேண்டும். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும் என்று மாநில அரசை பாப்புலர் ஃப்ரண்ட்-ன்  மாநில செயலக குழு கூட்டம் வலியுறுத்துகின்றது. கதிராமங்கல மக்களின் நியாயமான இப்போராட்டத்திற்கு பாப்புலர ஃப்ரண்ட் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. அம்மக்களின் போராட்டம் வெற்றி பெற அவர்களோடு பாப்புலர ஃப்ரண்ட் துணை நிற்கும்.

தீர்மானம் 3 : வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற கூறி நெருக்கடி கொடுத்து வருவதை தமிழக காவல்துறை நிறுத்த வேண்டும்!
 

உச்சநீதி மன்ற தீர்ப்பை காரணம் காட்டி மாநில காவல்துறை கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற கூறி தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் காவல்துறையின் நெருக்கடி தொடர்கின்றது. ஒரு நாளைக்கு 3நிமிடம், ஐந்து வேளை மட்டுமே தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி அழைப்பு விடுக்கப்படுகின்றது. வெறும் குறைந்த பட்சம் 15 நிமிடம் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்தும் விஷயத்தில் இந்த அளவு நெருக்கடி கொடுக்கத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் கூட 70 டெசிபலுக்கு குறைவாக இருக்கவேண்டும் என்பதனைத்தான் வலியுறுத்துகின்றது. அந்த வழிகாட்டுதலின் படி பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியின் ஒலி அளவை வைக்கும் படி வலியுறுத்தினால் போதுமானது. அதனை தவிர்த்து காவல் துறை கூம்பு வடிவ ஒலிபெருக்கியையே அகற்ற அதிக ஆர்வம் காட்டுவது சரியான அணுகுமுறையாக இருக்காது. காவல்துறை இத்தகைய செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலக குழு கூட்டம் கேட்டுக் கொள்கின்றது. இது விஷயத்தில் மாநில அரசு உடனே தலையிட்டு காவல்துறையின் இச்செயல்பாட்டை கட்டுப்படுத்தி வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றது.
 
இப்படிக்கு
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *