Breaking News

பழனியில் சந்தையில் வாங்கிய மாடுகளை எடுத்து செல்லும்போது தடுத்து நிறுத்தி, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, பொது சொத்துக்கும், பொது அமைதிக்கும் சேதம் விளைவித்த இந்து முன்னணி, சிவசேனா உட்பட்ட சங்பரிவார அமைப்புகளின் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்! முஸ்லிம், தலித், திராவிட, கம்யூனிஸ்ட், தமிழ் அமைப்புகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பு வரவேற்கத்தக்கது – பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை!

கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த விவசாயி துரையன், மாரிமுத்து ஆகியோர் சந்தையில் வாங்கிய  மாடுகளை தங்கள் ஊருக்கு பழனி வழியாக கொண்டு செல்லும் போது இந்து முன்னணி, சிவசேனா உட்பட சங்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு விவசாயியையும் வாகன ஓட்டியையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு முற்றுகையிட்டுள்ளனர். வட மாநிலங்களில் பசுவின் பெயரால் நிகழ்த்தும் பயங்கரவாத கொலை  சம்பவங்களை போன்று தமிழகத்திலும் அரங்கேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சங்கபரிவார அமைப்புகள் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தை கேள்விப்பட்டு பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள், தி.க, கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் ஒன்று திரண்டனர். மாடுகள் ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சட்டத்தை கையில் எடுத்த சங்பரிவார அமைபுகளின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் வாகனத்தை தடுத்து நிறுத்திய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை அதிகாரிகள் விட்டு விட்டது கண்டனத்திற்குரியது. இதன் பின் பசு பயங்கரவாதிகள் பொது சொத்துக்களை சேதப்படுத்தி அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து கலவரத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இதன் பின்னர்தான் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது.
 
சமீபத்தில் மாடுகள் விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும் பசு பயங்கரவாதிகள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல், கோவை உட்பட பல மாவட்டங்களில் சந்தையில் வாங்கி செல்லும் மாடுகளை தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்து வருகின்றனர். மேலும் பணம் கொடுத்தால்தான் வண்டியை போக அனுமதிப்போம் என்று கூறி மாட்டு வியாபாரிகளிடம் பணத்தை பறிக்கும் வேலையையும் இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மாடுகளை ஏற்றி செல்லும் வாகனத்தை எங்கே தடுத்து நிறுத்தினாலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு பொது அமைதி கெட்டு விடும் சூழல் உருவாகி விடும் என்பதை காவல் துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். பழனியில்  விவசாயிகள், முஸ்லிம், தலித், திராவிட, கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ் அமைப்புகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் சங்பரிவாரத்தின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது போன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும் என அமைதியை விரும்பக் கூடிய அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கின்றேன்.
 
காவல்துறையினர் வழக்கம்போல் பிரச்சனை செய்த சங்பரிவார அமைப்பினரை  விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீதே கடுமையாக நடவடிக்கை எடுக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொலைவெறி தாக்குதல் தொடுத்து,பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இந்து முன்னணி, சிவசேனா உட்பட்ட சங்பரிவார அமைப்புகளின்  நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும். நீதத்தோடு செயல்பட வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கின்றேன்.
                                                                                      
இப்படிக்கு
 
A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *