Breaking News

கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் இந்து முன்னணி குண்டர்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பிரச்சனையில் காவல்துறையினர் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே குண்டாஸ் வழக்கு! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் அனைத்து சமூக மக்களும் சமூக நல்லிணக்கத்தோடும், சகோதரத்துவ வாஞ்சையோடும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்திலும், ஒற்றுமையாக வாழும் மக்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடும் இந்து முன்னணியை சார்ந்த குண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள அஜீசியா பள்ளிவாசலில் தொடர்ந்து பிரச்சனை செய்வது, தொழுகைக்கு இடையயூறு செய்வது, ஒளு செய்யும் இடத்தில் மலத்தால் அசுத்தப்படுத்துவது போன்ற சமூக விரோத செயலில் இந்து முன்னணி குண்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களுக்கு புகார் கொடுத்தும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்கள் ரமலான் இரவு தொழுகையை முடித்து விட்டு வரும்போது இந்துமுன்னணி குண்டர்களால் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கேலி செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஈவ் டீசிங் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் புகார் கொடுத்தும் காவல்துறை கேலி செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு மறுநாள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும், பள்ளிவாசலை சூறையாட வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்து முன்னணியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பயங்கர ஆயுதங்களோடு வந்து பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த பகுதி மக்களின் சாதுர்யமான நடவடிக்கையினால் இந்து முன்னணியினர் ஏற்படுத்த முயன்ற மிகப்பெரும் மதக்கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயம் அடைந்துள்ளனர். முஸ்லிம்களின் பொருளாதாரமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் காவல் துறையினர் நீதிக்கு புறம்பான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். போடப்பட்ட மூன்று வழக்குகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் 28 பேர் மீதும், பள்ளிவாசலை சூறையாடி மதகலவரத்தை ஏற்படுத்த முயன்ற இந்து முன்னணி குண்டர்கள் 19  பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தரப்பில் படிக்க கூடிய மாணவர்கள் இரண்டு பேர் உட்பட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்தரப்பில் 7 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இந்த பகுதியை சேர்ந்த நிஜாம் என்பவர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் பெண்கள் கேலி செய்த பிரச்சனையில் தன்னுடைய குடும்பத்தை அழைத்து வருவதற்காக சென்ற இவரை கைது செய்து தற்போது குண்டாஸ் போட்டுள்ளது காவல் துறை.

மேற்கூறிய பிரச்சனையில் தேனி மாவட்ட காவல்துறை பள்ளிவாசலை சூறையாடி, மதகலவரத்தை ஏற்படுத்த முயன்ற இந்து முன்னணி குண்டர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறையின் நீதிக்கு புறம்பான இத்தகைய செயல்பாடுகள்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கு பதிலாக பிரச்னையின் வேகத்தை அதிகப்படுத்துகின்றது. மதக்கலவரம் ஏற்படுத்த துடிக்கும் இந்து முன்னணியின் குண்டர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை காவல்துறையின் நடவடிக்கை அளித்துள்ளது. இந்த பிரச்சனையில் தமிழக அரசு உடனே தலையிட்டு பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் இந்துமுன்னணியை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கின்றோம்.     
 
                                
இப்படிக்கு
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *