Breaking News

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது

புதுடில்லி : மத்தியப்பிரதேச மாநிலம் மந்தூசரில் கடன் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபூபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்களின் ஜனநாயக போராட்டங்களை இவ்வாறு கையாளுவது ஜனநாயக சமுதாயத்தின் மீதான மனிதாபிமானமற்ற மற்றும் அவமானமான செயலாகும். பலப்பிரயோகத்தையும் பயங்கரவாதத்தையும் பயன்படுத்தி இத்தகைய கொடூரமான கொலைகள் மூலம் மக்கள் போராட்டங்களையும் அதிருப்தியையும் ஒடுக்க பாஜக அரசாங்கம் புதிய முயற்சியை எடுத்து வருகிறது.
 
போபால் மத்திய சிறைச்சாலையில் விசாரனைக்காக இருந்தவர்கள் போலி என்கௌண்டரில் கொல்லப்பட்ட சம்பவங்கள் உட்பட பல சமீபத்திய சம்பவங்கள், மாநில அரசாங்கம் ஒரு மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியைப் போல் செயல்படுகிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இந்திய விவாயிகளின் அவல நிலைகள் மிக அவசரமாக விவாதிக்க படவேண்டிய ஒன்று என்பதை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
 
மத்தியில் NDA அரசு அதிகாரத்திற்கு வந்தபின் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பாகியுள்ளது. பயிர் சேதம், கடன் சுமைகள் மற்றும் அரசாங்கங்களின் புதிய தாராளவாத கொள்கைகள் ஆகியவற்றால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்மூடித்தனமாக கடுமையான இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளை தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாக ஆக்குவது எதிர்க்கப்பட வேண்டும் மற்றும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்த கொலைகள் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதேபோல் அந்த மாநில மக்களுடன் தேசத்தின் அனைத்து மக்களும் இத்தகைய படுகொலைகளுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு
 
ஷபீகூர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *