Breaking News

கால்நடை வர்த்தகத்திற்கு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்

மத்திய அரசு விதித்துள்ள கால்நடைகள் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகக் கூட்டம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான மக்கள் விரோத, ஜனநாயக விரோத மற்றும் ஒருதலைப்பட்சமான   நடவடிக்கை ஆகும். இது, மில்லியன் கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்தை இது மேலும் ஆட்டம் காண வைத்துவிடும். கால்நடை வர்த்தகத்தில் தடை எதுவும் இல்லை என்ற விளக்கம், மாட்டிறைச்சி தடைக்கு தயக்கம் காட்டி வந்த  சில வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் மக்களை சமாதானப்படுத்தும் ஒரு தந்திரமாகும். உண்மையில், கால்நடை வர்த்தகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது  மாட்டிறைச்சியை தடை செய்வதற்கு ஒப்பாகும்.  விவசாயம் தவிர்த்து கால்நடைகளை வாங்கவும் விற்கவும்  தடை என்பதில் இருந்தே அவர்களின்   நோக்கத்தை  நாம் புரிந்து கொள்ளலாம். 

கால்நடைகளை இறைச்சிக்காக  விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும் தடை விதித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடையை விதித்துள்ள  சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவையும் ,மத்திய அரசின் மாட்டிறைச்சி தடையை அமல்படுத்த முடியாது என்ற கேரள அரசின் முடிவையும்  பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது. இதற்கிடையில், மயில்கள் பாலியல் உறவு கொள்வதில்லை, அது கண்ணீர் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றது என்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியிடமிருந்து வந்திருக்கும் இத்தகைய அபத்தமான கருத்துக்களை இந்த கூட்டம் விமர்சித்துள்ளது.

பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதால் 25 வயது முஸ்லிம் பெண்ணுடைய திருமணம் செல்லாது என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்சின் தீர்ப்பையும் விமர்சனம் செய்ததுடன், இத்தகைய தீர்ப்புகள் நம் நீதி அமைப்பு முறையை கேலிக்குரியாக்கி வருவதுடன்,நீதிக்கு அப்பாற்பட்ட வேறு சில தனி மனித காரணிகள் ஆதிக்கம்  செலுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளது. 

சஹரன்பூரில் உள்ள தாகூர் சமுதாய உறுப்பினர்களால் தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு இந்த கூட்டம் உ.பி. அரசு மற்றும் பாஜக மீது பொறுப்பு சுமத்தியுள்ளது. பிஜினூரில் ரயிலில் பயணம் செய்த ஒரு முஸ்லிம் பெண்ணை சிஆர்பிஎஃப் வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உ.பியின்  புதிய அரசாங்கத்தின் கீழ் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அடிக்கடி நிகழும் வன்முறை சம்பவங்கள்  மூலம், அங்கு சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், அதற்கு பதிலாக அது இந்துத்துவ குண்டர்களின் கைகளில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

குழந்தை கடத்தல்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் வன்முறை கும்பலால் நான்கு அப்பாவி முஸ்லிம்கள் காவல் துறையின்  கண் முன்னே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதை இந்த கூட்டம் கடுமையாக கண்டித்துள்ளது. பாசிச சக்திகளின் வெறித்தனமான ,போலியான பரப்புரையின் காரணமாக ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வே இது போன்ற தாக்குதல்களுக்கு அடிப்படை காரணம் ஆகும். இச்சம்பவத்தில், காவல்துறை அதிகாரிகள் உட்பட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட  அனைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும்  இந்த கூட்டம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபூபக்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் O.M.A.சலாம், பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, தேசிய நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் E.M.அப்துர்ரஹ்மான், அப்துல் வாஹித் சேட் மற்றும் K.M. ஷரீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.                                                                                                     

இப்படிக்கு 

M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *