Breaking News

மாட்டிறைச்சி தடை! -சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தடைக்கு வரவேற்பு! ஐ.ஐ.டி மாணவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்! – தமிழக அரசு மவுனம் கலைத்திட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

மத்திய அரசு அறிவித்துள்ள பசு, காளை, எருமை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று (30.05.2017) 4 வார காலத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த இடைக்கால தடையை வரவேற்கின்றது. கோடிக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் தனிநபர் உரிமை பறிப்பு என ஒட்டுமொத்தமாக இந்தியாவை சீர்குலைக்கும் இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றது.
 
அதே போன்று, மாட்டிறைச்சி தடையை எதிர்த்து போராட்டம் நடத்திய சென்னை ஐ,ஐ.டி மாணவர் சூரஜ் குமார் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதுடன், சூரஜ் குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றது.
 
தமிழக அரசு இனியும் மவுனம் சாதிக்காமல் மக்களுக்கு எதிரான, மாநிலங்களின் உரிமையை பறிக்கக்கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திட மாட்டோம் என உடனடியாக அறிவித்திட வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகின்றது.

இப்படிக்கு

A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *