Breaking News

கால்நடை விற்பனை தடை! முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிராக இந்துத்துவாவின் வன்முறையை தூண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை தடை மற்றும் கால்நடைகள் விற்பனையில் புதிய நிபந்தனைகளை மத்திய அரசாங்கம் விதித்திருப்பது நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வன்முறையை தூண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயலாளர் அப்துல் வாகித் சேட் இன்று விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார். நடைமுறையில் உள்ள கால்நடைகள் வதை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்களை தொடர்ந்து இந்த அறிக்கையை அவர் விடுத்துள்ளார். தாங்கள் விரும்பியதை உட்கொள்ளும் மக்களின் சுதந்திரம் மீதான நரேந்திர மோடி அரசாங்கத்தின் மற்றுமொரு தாக்குதல் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களின் பிரகாரம், பசு மாடுகள் மட்டுமின்றி, எருமைகள், காளை மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற கால்நடைகளை விவசாய தேவைகளுக்காக விற்கவும் வாங்கவும் செய்கிறோம் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபரிடமே அவை விற்பனை செய்யப்படும். இது கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளை பாதிப்பதுடன் நாட்டின் இறைச்சி தொழிலையும் சீர்குலைத்து விடும். கறவை தராத, வயதான கால்நடைகளை விற்பனை செய்ய முடியாததன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படும். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் இந்துத்துவ குண்டர்களின் அதிகரித்து வரும் வன்முறையை சந்தித்து வரும், கீழ் மட்ட அளவில் இறைச்சி மற்றும் தோல் தொழில்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களும் தலித்களுமே இதனால் மோசமாக பாதிக்கப்படுவர். ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் பால் பண்ணை வியாபாரி பெஹ்லு கான், குஜராத் உனாவில் தாக்கப்பட்ட தலித்கள் என்று அரசு ஆதரவுடன் நடைபெற்ற அத்துமீறல்கள் இனி வரும் நாட்களில் அதிகரிக்கலாம்.

மேலும் இந்தியா முழுவதும், இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை அனுமதித்துள்ள மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமலாக்கியுள்ளது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலாகும். இச்சூழலில் இச்சட்டத்தை கேரளா அரசாங்கமும் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளதை இவ்வறிக்கையில் அப்துல் வாகித் சேட் வரவேற்றுள்ளார். இந்தியா முழுவமும் பசு வதை தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் சட்டமாக்கியுள்ளது என்று தெரிவித்ததுடன் இப்புதிய இந்துத்துவ திட்டத்திற்கு எதிராக தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அப்துல் வாகித் சேட் கேட்டுக் கொண்டார்.
 
இப்படிக்கு
 
 
ஷஃபீக் ரஹ்மான்,
செயலாளர், மக்கள் தொடர்பு துறை,
பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *