Breaking News

பில்கிஸ் பானு வழக்கிற்கு இன்னும் கடுமையான தண்டனையை தீர்ப்பாக கொடுத்திருக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கருத்து!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் வெளியிடப்பட்ட அறிக்கை :
 
 2002 குஜராத் இனப்படுகொலையில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு அவருடைய குடும்பத்தினர் 14 நபர்களை படுகொலை செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு வரவேற்றுள்ளது. விசாரணை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளை உயர் நீதிமன்றம் தண்டித்துள்ளது நேர்மறையான ஒன்றாக இருக்கிறது. இச்சம்பவத்தின் வலியை நோக்கும் பொழுது  இந்த கொடூரமான குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனையை உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கருதுகிறது. இதே போன்ற வழக்குகளை, நீதிமன்ற பாரம்பரியத்தை வைத்து பார்க்கும் பொழுது, பில்கிஸ் பானு வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனை போதாது. 2012 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது, கூட்டு வன்புணர்வு வழக்குகளில் அதிகபட்ச தண்டனையை வழங்க முடியும் என்பதை காட்டுகிறது. பில்கிஸ் பானு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு அரசு எடுத்து சென்று குற்றத்தில் ஈடுப்பட்ட அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த குழு வேண்டுகோள் விடுக்கிறது.
 
ஜமியத் உலமா-இ-ஹிந்தின்  கீழ் பிரதமரை சந்தித்த குழு குறித்து கருத்து தெரிவித்த பாப்புலர் ப்ரண்ட்,  முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம் மூன்று முறை நடைபெற்றது. அந்த பிரதிநிதிகள் கூட்டங்களின் ஏகமனதான முடிவின் அடிப்படையில் தான் பிரதமரை சந்திக்க  சென்றதாக அந்த குழு கருத்து தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கையிலிருந்து படிக்கும் பொழுது இந்த கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு கொடுக்க வில்லை மாறாக, ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைமையின் வேண்டுகோள் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாஜக அரசின் ஆதரவின் அடிப்படையில் சங்கபரிவார் குண்டர்கள் தேசம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களின் பின்னணியில், முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சத்தை  நீக்க பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளும் உரிமை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது.
 
மேலும் இப்பொழுது இயக்கத்தின் சார்பாக அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி நிதி சேகரிப்பு இயக்கத்திற்கு முழு மனதுடன் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 
இப்படிக்கு
 
M. முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *