Breaking News

தெலுங்கானாவில் தொடரும் சமூகநீதி! தமிழகத்திலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலக குழு தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  மாநில செயலக குழு 18.04.17 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலையமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொது செயலாளர் A.ஹாலித் முகம்மது, மாநில துணை தலைவர் M.முகம்மது சேக் அன்சாரி மற்றும் மாநில செயலாளர் A.முஹைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு செயலக குழு கூட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தீர்மானம் 1: தெலுங்கானாவில் தொடரும் சமூகநீதி! தமிழகத்திலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்!

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற, சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு முடிவு செய்து, இட ஒதுக்கீட்டு சதவீதத்தை உயர்த்தும் வகையிலான மசோதாவுக்கு மாநில அமைச்சரவையில்  ஒப்புதல் அளித்துள்ளது. சமூக நீதிக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தெலுங்கானா அரசின் இந்த முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது.

மக்கள் தொகைக்கு இணையாக இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தந்திட்ட தெலுங்கானா அரசின் முயற்சிகளில் இருந்து, தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டுவேண்டும். தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை சமூகநீதி வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 

நீதிபதி சச்சார் குழு பரிந்துரை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தெலுங்கானா அரசு அதை செய்திருப்பதும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் முடிவும் பாராட்டிற்குரியது.

இதேப்போன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருவதுடன்  பல  போராட்டங்களையும் நடத்தியுள்ளது. மறைந்த தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில்  தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுவரையிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

சமூக நீதிக்கொள்கையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விவகாரத்தில் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தமிழகத்திற்கு முன்னோடியாக திகழ்கின்றன. ஆகவே, தெலுங்கானா அரசை பின்பற்றி, முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதம்  இட ஓதுக்கீடு வழங்கிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 2: பெட்ரோல், டீசல் மீதான விலையை தாங்களாகவே தினமும் தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது கண்டிக்கத்தக்கது. அதனை உடனே திரும்ப பெறவேண்டும். 
 

சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனகளுக்கு கடந்த காங்கிரஸ் அரசு வழங்கியது. இதனால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்று அப்போதைய மத்திய அரசுக்கு எதிராக பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தது. இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் கண்டனங்களை தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே பா.ஜ.க அரசு அதிகாரத்திற்கு வந்த பின் அதே மக்கள் விரோத நிலைப்பாட்டை தொடர்வதோடு, எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் வழங்கி மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. 

வாரம் ஒரு நாள் விலை நிர்ணயம் செய்து கொள்ள கொடுக்கப்பட்ட அனுமதியை தற்போது தினமும் விலை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது. சமையல் எரிவாயு விலையை அந்தந்த நிறுவனங்கள்  தீர்மானித்துக் கொள்ளலாம்  என்ற அறிவிப்பின் மூலம் வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிப்பதுடன் அத்தியாவச பொருள்களின் விலை ஏற்றத்தினால் வாழ்வாதாரமும் பாதிக்கும் நிலை ஏற்படும். மக்களின் அரசாக செயல்படாமல் பெருநிறுவனங்களின் அரசாக பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய வானாளவிய அதிகாரத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்வதோடு பெட்ரோல், டீசல்  மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயலக குழு கேட்டுக் கொள்கிறது.
 
தீர்மானம் 3: மாட்டை வைத்து அரசியலாக்கி அதன் மூலம் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துவதை பாஜக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
 
பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுவாக முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் தலித்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருகின்றார்கள். பா.ஜ.க வின் தொண்டர்களும், தலைவர்களும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சிறுபான்மையினரை தொடர்ந்து தாக்கும் செயலை செய்து கொண்டிருப்பது தொடர்கதையாகிவிட்டது. மதத்தின் பெயரால் வெறுப்பை அரசியலுக்கு பயன்படுத்தி சமீபத்தில் நடைபெற்ற உ.பி. சட்டமன்ற தேர்தலிலும் அதிக இடங்ககளை பெற்று பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் விளைவாக இந்துத்துவ தொண்டர்கள் வெளிப்படையாகவே பசுவை வைத்தும், இல்லாத லவ் ஜிகாதின் பெயரிலும் முஸ்லிம்களை தாக்குவது தொடர்கதையாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் இராஜஸ்தானில் அப்பாவி வியாபாரியான பெகுலுகான் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை ஆரம்பம் இல்லை இதற்கு முன் அக்லாக் என்ற முதியவர் மாட்டிறைச்சி வைத்துள்ளார் என்ற பொய்யான காரணத்தை காட்டி படுகொலை செய்தது மட்டுமல்ல அதனை கொலையை நியாயப்படுத்தவும் செய்தனர். 

அதே போல் யுவவாகினி என்ற பெயரில் உ.பி. முதலமைச்சரான யோகி ஆதித்யாநாத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கொலைகாரக்கும்பல் காதல் கலாச்சாரத்தை தடுக்கின்றோம் என்ற பெயரில் சாலையில் ஜோடியாக நடந்து செல்லுபவர்களை விசாரணை செய்வதும், தாக்குதல் நடத்துவதும் எந்த தடையுமின்றி நடைபெற்று வருகின்றது. அதன் உச்சக்கட்டம் தான் உ.பி. மீரட்டில் முஸ்லிம் வீட்டில் புகுந்து படுக்கை அறை வரை சென்று தம்பதியினரை கடுமையாக தாக்கி அசிங்கப்படுத்தினர். இதனை தடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் கொலைகார கும்பலுக்கு  ஆதரவாக செயல்படுகின்றது. இது ஜனநாயக மரபுகளுக்கும், மக்கள் நலனுக்கும் எதிரானது. இத்தகைய கொடூர செயல்பாட்டை, அரசின் விரோத போக்கையும் இக்குழு கண்டிக்கின்றது. மத்திய அரசு தனது மவுனத்தை கலைத்து குற்றவாளிகளை தண்டித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அத்தோடு மதச்சார்பற்ற  சக்திகள் ஒன்றிணைந்து எந்த அரசு துறையிலும் இல்லாத இதுபோன்ற வன்முறை கும்பலின் அதிகாரத்தை முடக்கிட முயற்சிகள் எடுத்திட வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கின்றது.
 
இப்படிக்கு
 
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *