Breaking News

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் அத்துமீறல்களை நிறுத்துக : பாப்புலர் ஃப்ரண்ட்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் அதிகரித்து வரும் அத்துமீறல்களை வன்மையாக  கண்டிப்பதுடன்,  பசுவை உணவாக உட்கொள்ளும் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உத்தர பிரதேச மற்றும் குஜராத் அரசாங்களின் புதிய நகர்வுகளை பின்வாங்க வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உணவை உட்கொள்வதையும் கால்நடைகள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் அரசாங்கங்களின் முதன்மை கடமை என்று அக்கூட்டத்தல் நினைவூட்டப்பட்டது.
 
கொள்ளைக்கூட்டங்கள் மக்களை தாக்கி கொலை செய்கின்றன. உணவகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. பசு பாதுகாப்பு கும்பல்கள் காரணமின்றி வன்முறையில் ஈடுபடுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த பெஹ்லு கான் படுகொலையில் இதை கண்டோம். அவர் பால்பண்ணை விவசாயியே அன்றி இறைச்சிக் கடைக்காரர் அல்ல. பசு பாதுகாப்பை அரசியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தும் பா.ஜ.க.வின் செயல் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை கொடூரமாக்கியுள்ளது. சட்டவிரோதமானவை என்று குறிப்பிட்டு இறைச்சிக் கூடங்கள் மீது உத்தர பிரதேச ஆதித்யநாத் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையானது அம்மாநில பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். குஜராத்தில் புதிதாக திருத்தப்பட்ட பசு பாதுகாப்பு சட்டம் தலித் மற்றும் சிறுபான்மை சமூகங்களை சார்ந்த அப்பாவி மக்களை அதிகாரிகள் தொல்லை படுத்துவதற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு அவர்களின் அரசியல் நயவஞ்சகத்தனத்தை காட்டுகிறது. வட கிழக்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மாட்டிறைச்சி கிடைக்கும் என பா.ஜ.க. வாக்குறுதி அளிக்கிறது. உணவு பழக்கங்கள் மற்றும் உணவு விற்பனை ஆகியவை மக்களின் வாழ்வதற்கான உரிமையுடன் தொடர்புடையது என்றும் அரசாங்கம் அவற்றை தடுக்கக் கூடாது என்றும் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ கிளை கூறியுள்ளதை இக்கூட்டம் வரவேற்கிறது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு ஆதரவு!

நாடு முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவளிப்பதாக மத்திய செயலக குழுவின் மற்றொரு தீர்மானம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகள் தற்போது போராட்டத்தை தேசிய தலைநகருக்கு கொண்டு வந்துள்ளனர். விவசாயிகளின் அவல நிலையை முற்றிலும் புறக்கணிப்பதாகவே தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் நிலையாக இருந்து வருகிறது. விவசாயிகளின் தற்கொலை அதிர்ச்சியளிக்கும் அளவில் தொடர்ந்து உள்ள போதும் அரசாங்கம் இதனை குறித்து எதுவும் செய்யவில்லை. இவர்கள் நவீன தாராளவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள். எத்தனை பெரிய பொருளாதார மோசடியில் இருந்தும் பணக்காரர்கள் தப்பிக்கும் நிலையில் கடன்களை திரும்ப செலுத்தாதற்காக தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள ஏழை விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கடன்களை ரத்து செய்வதே விவசாயிகளின் அவல நிலையை போக்குவதற்கும் அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் அரசாங்கங்களும் வங்கிகளும் செய்யும் குறைந்தபட்ச உதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோருகிறது.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும் மக்கள் மனங்களில் உள்ள சந்தேகங்களை களைவதற்கு தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய செயலக குழு மற்னொரு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களும் சமீபத்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாக கையாளப்பட்டது குறித்த சந்தேகங்களை எழுப்பினர். மத்திய பிரதேசத்தின் பீட் என்ற இடத்தில் செய்முறை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது என்றும் சமீபத்திய உத்தர பிரதேச தேர்தல்களுக்கு பின்னர் கான்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 இயந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் குழு தெரிவித்தது.

சந்தேகத்தின் நிழல் மட்டுமின்றி, நமது ஜனநாயக நடைமுறையின் முக்கிய செயல்முறை மீதான ஆதாரம் கோரப்படும் போது இதனை வெறுமனே புறந்தள்ள முடியாது. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை மீண்டும் கொண்டு வர, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முந்தைய வாக்குச் சீட்டு முறை கொண்டு மாற்ற வேண்டும் என்ற தனது தொடர் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் முன் பாப்புலர் ஃப்ரண்ட் மீண்டும் வைக்கிறது.
 
இப்படிக்கு
 
இயக்குநர்,
மக்கள் தொடர்பு துறை,
பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *