Breaking News

தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகைகளுக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்க்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வலியுருத்தல்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் ஏப்ரல் 1ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர்கள் முஹைதீன் அப்துல் காதர், ஃபயாஸ் அஹமது மற்றும் அஹமது நவவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :    

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கீழடி கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகின்றது. அப்பணிக் குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திலிருந்து அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்யவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் வலியுருத்துகிறது.

மத்திய பா.ஜ.க அரசு உள்நோக்கத்தோடு கீழடி கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணிக் குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை தமிழகத்திலிருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. வைகை கரையை ஒட்டிய பகுதிகளில் கிடைத்த தொல் பொருட்களை வைத்து கீழடி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்  அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது. இதற்கு முன் தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்களின் தாழி மட்டுமே கிடைத்திருக்கிறன. ஆனால் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் மட்டுமே அந்த மக்கள் வாழ்ந்த வீடுகள் மற்றும் தொழில் சான்றுகளும் தொல்லியல் பொருட்கள் மூலம் கிடைத்துள்ளது. அங்கு 5000 க்கும் மேல் பெறப்பட்ட எச்சம் மற்றும் தொல்லியல் பொருட்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் வெறும் 2 பொருட்கள் மட்டுமே கார்பன் டேட்டிங் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள அந்த இரண்டு பொருட்களும் கி.மு 2-ம் நூற்றாண்டை குறிக்கின்றது என்று ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. இந்த ஆய்வுக்கான மூன்றாம் கட்டப்பணி தொடரவேண்டும் என்பதற்காக நிதி உதவி வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த ஆய்வினை நிறுத்துவதற்கான வேலையை மவுனமாக செய்து வருகின்றது. இந்துத்துவவாதிகளால் கற்பனையாக முன் வைக்கப்படும் ஹரப்பா-சிந்து சமவெளி நாகரீகம் தான் சரஸ்வதி நதி நாகரீகம் என்றும் அந்த நாகரீகம்தான் தொன்மையான ஆரிய நாகரீகம் என்றும் ஆரியர்கள் இந்த பூமியின் பூர்வக் குடிமக்கள் என்றும் வரலாற்று திரிபு சித்து வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது நடந்துவரும் கீழடி அகழாய்வு இவர்களின் கற்பனை கதைகளையெல்லாம் பொய்ப்பித்துவிடுமோ என்ற அச்சமும், உள் நோக்கமும் தான் இதனை முடக்குவதற்கான காரணமாகும். இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட 5300 பழந்தமிழர்களின் பழமையான தொல்லியல் பொருட்களில் மத அடையாளங்கள் ஒன்றும் இல்லை என்பது குறப்பிடத்தக்கது. 

இந்த ஆய்வு தொடர்ந்தால் ஆதி பழந்தமிழர்களின்  நாகரீகம்  வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதினை மனதில் கொண்டே ஆய்வை முடக்கும் வேலையினை மத்திய அரசு செய்து வருகின்றது. தனது புதிய கொள்கையை முன் வைத்து அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் பணியிட மாற்றத்தை மேற்கொண்ட மத்திய அரசின் முடிவை ‘மத்திய நிர்வாக தீர்ப்பாயம்’ ரத்து செய்து மீண்டும் அவரை  பணியில் தொடர வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த செயல்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிப்பதுடன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின்  பரிந்துரையை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்குழுவின் தலைவராக தொடரவைக்க  வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது. இல்லாத சரஸ்வதி நதியை தேடுவதையும் அதற்காக கோடிக்கணக்கில் செலவிடுவதையும்  நிறுத்திவிட்டு பழந்தமிழர்களின் பண்பாடு, நாகரீகத்தை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழ்வாராய்ச்சி பணி தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 

தீர்மானம் 2 :

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன போன்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து அவர்களின் கோரிக்கைகளை உடனே  நிறைவேற்ற வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பயிர்கள் அனைத்தும் கருகிய நிலையில் 250-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்  என்ற அடிப்படையிலும், தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 20 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் இறந்துவிட்ட நிலையிலும் கூட மத்திய ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் இந்த போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது வேதனையளிக்கிறது. அத்தோடு பாஜகவின் எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்தையும், போராடுபவர்களையும்  தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் வாழ்வுக்கு நல்ல வழி பிறக்காதா என்ற அடிப்படையில் போராடி வருகின்ற சூழலில் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் விவசாய பூமியை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இச்செயல்  வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது. இத்தகைய எஜமானிய மன நிலையோடும், மக்கள் விரோத மன நிலையோடும் செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் மற்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்த்து அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தலைவர்கள் கூட்டத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு 

A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *