Breaking News

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகள் விழித்தெழுவதற்கான எச்சரிக்கை : பாப்புலர் ஃப்ரண்ட்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியாவில் மதச்சார்பற்ற அரசியலுக்கான எச்சரிக்கை ஒலி என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக குழு அதன் தலைவர் E.அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மதச்சார்பின்மை பெயரில் செயல்பட்டு வரும் மாறுபட்ட அரசியல் கட்சிகள் தற்போது ஒரு முழுமையான சுயபரிசோதனை செய்யாமலும் தாங்கள் உயர்த்திப் பிடிப்பதாக கூறும் கொள்கைகள் மீதான பற்றுதலை பலப்படுத்தாமலும் இழுந்தால் அவர்களின் இருப்பை கூட தக்க வைக்க முடியாது. 

தேர்தல் முடிவுகளில் பல்வேறு காரணிகளுடன் ஆட்சியில் இருந்தவர்களுக்கு எதிரான மனப்போக்கும் வெளிப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்தவர்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். இருந்தபோதும், உத்தர பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற மிகப் பெரிய வெற்றி அவர்களின் பிரிவினைவாத யுக்திகள், கவனமான திட்டமிடல் மற்றும் கடும் முயற்சியே வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. மாநில அரசாங்கங்கள் மீதான மக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் சிறுபான்மையினருக்கு எதிரான உணர்ச்சிகளை ஏற்படுத்தி மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதில் சங்பரிவாரால் வெற்றி பெற முடிந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மதச்சார்பற்ற சக்திகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகின்றது. வழக்கம்போல் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் முக்கிய எதிரிகளாக தங்களுக்குள் போட்டியிட்டு வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு வெற்றியை எளிதாக்கின. பா.ஜ.க.வுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் உண்மையான அக்கறை ஏதும் இல்லை.  மதச்சார்பின்மையின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்பவர்கள் தங்களுக்குள் போட்டியிட மதச்சார்பின்மையை காப்பாற்றும் முழு சுமையும் முஸ்லிம்களின் பொறுப்பானது.

முஸ்லிம்கள் தங்களுக்கு அதிகளவில் வாக்களித்தார்கள் என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரமும் அடிப்படையற்றது. இந்துகளின் ஓட்டுகளை ஒருங்கிணைப்பதில் பா.ஜ.க. வெற்றியடைய முஸ்லிம்களின் ஓட்டுகள் எதிர் எதிர் திசையில் போட்டியிட்ட மதச்சார்பற்ற கூட்டணிகளுக்கிடையில் பிரிந்ததையும் கவனமாக ஆய்வு செய்தால் தெரிந்து கொள்ளலாம். 

கோவாவிலும் மணிப்பூரிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய விதம் கண்டனத்திற்குரியது. இவ்விரு மாநிலங்களிலும் பெரும்பான்மை மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்த போதும் விலை போகக்கூடிய பித்தலாட்ட தலைவர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தில் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ஆளுநர்கள் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர். தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்கள் மீது தங்கள் ஆட்சியை திணிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படையே தகர்த்துள்ளனர். 

மக்கள் நலன் கொள்கையில் தங்களின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதில்தான்  மதச்சார்பற்ற கட்சிகளின் எதிர்காலம் இருக்கிறது. மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாதது இந்துத்துவத்திற்கு ஆதரவான சூழல் நாட்டில் இருப்பது போல் செய்யப்படும் பிரச்சாரத்தில் உண்மை இல்லை என்பதை காட்டுகிறது. ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகள் கொள்கை சார்ந்த, மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியலுக்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாக கையாள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற பல்வேறு கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றது என்று ஒதுக்கிவிட முடியாது. மீண்டும் சரிபார்க்க வாய்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை வாக்குச் சீட்டுகள் வழங்குவதால் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளும் கூட வாக்கு சீட்டு முறையையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முறையின் நேர்மையை பாதுகாக்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரைஷி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டார். நமது தேர்தல் நடைமுறைகள் மீதான வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் மத்திய செயலக குழு கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு

M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *