Breaking News

பட்ஜெட் 2017 : தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – பாப்புலர் ஃப்ரண்ட்

தமிழகத்தின் கடன் சுமை மார்ச் 2018 ல் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும்  என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடி என்றும், நிதிப்பற்றாக்குறை ரூ.41,977 கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படிருப்பதும், ஒவ்வொரு ஆண்டும் கடன் மட்டுமே அதிகரிக்கும் வகையில் தான் நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதும் மிகுந்த  கவலை அளிக்கிறது. இது கடுமையான நிதி நெருக்கடியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒத்துக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தினை கிடப்பில் போட்டுவிடாமல் முழுமையான முறையில் நிறைவேற்ற வேண்டும்.

வறட்சியின் காரணமாக தொடர்ந்து பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகிவரும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை பாதிப்பின் வீழ்ச்சியிலிருந்து மீட்கும் வகையிலான எந்த அறிவிப்பும் இல்லாதிருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து அமைப்பினரும் குரல் கொடுத்திட்ட பிறகும் பருவமழை பொய்த்ததினாலும் பயிர்கள் கருகிவிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் தமிழகத்தில் மட்டும் 275 விவசாயிகள் தற்கொலை செய்திட்ட பிறகும் கூட விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பதும் கண்டனத்திற்குரியது. இது  அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு  உரிய மதிப்பளிக்க தவறிவிட்டது என்பதையும் விவசாயிகள் மீது இந்த அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையும்  காட்டுகின்றது.

80 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான உருப்படியான எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை என்பது அரசின் எதிர்கால திட்டமிடுதலில் உள்ள குறைபாட்டை நிரூபிக்கும் வகையில் உள்ளது. சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கான எந்த வளர்ச்சி திட்ட அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதோடு சிறுபான்மையினர் மீதான அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில  புதிய திட்டங்கள்  வரவேற்பை பெற்றாலும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலோ மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலோ இல்லாது ஏமாற்றம் அளிக்ககூடிய பட்ஜெட்டாகவே உள்ளது. அதே நேரத்தில்  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும்  வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், முழுமையான முறையில் செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும். கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
 
இப்படிக்கு
 
எம்.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *